சென்னை அடுத்த மாதவரத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 ஆயிரம் கிலோ செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாதவரத்தில் உள்ள அரசு கிடங்கில் இருந்து செம்மரக் கட்டைகள் திருடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ராஜேஷ் மற்றும் பூபதி என்ற இருவரை கைது செய்தனர். அவர்களிம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மீஞ்சூர் பகுதியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் மீஞ்சூரை அடுத்த கவுண்டர்பாளையம் என்ற இடத்தில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து சுமார் 30 ஆயிரம் கிலோ செம்மரக் கட்டைகளை கைப்பற்றிய காவல்துறையினர் திருவள்ளூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குடோனின் உரிமையாளர்கள், செம்மரக்கட்டைகளை எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது என்பது குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.