ஜி.கே.வாசன் சித்தப்பா ஜி.ஆர் மூப்பனார் மறைந்ததையடுத்து அவரது உடல் சொந்த ஊரான சுந்தரபெருமாள் கோவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
 
அவருக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தற்போது ஜி.கே.வாசன் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிற நிலையில் அஞ்சலி செலுத்தியது ஜி.கே.வாசனை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 
 
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜி.ரெங்கசாமி மூப்பனார் இவர் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் மற்றும் ஜி.கே.வாசனின் சித்தப்பா ஆவார். 
 
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், திருவையாறு ஸ்ரீதியாக பிரும்ம சபாவின் தலைவர் எனப் பொறுப்புகளை வகித்தவர். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
பின்னர் கடந்த 15 தினங்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசனின் வீட்டில் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 19-ம் தேதி காலை திடீரென சென்னையில் ஜி.ஆர்.மூப்பனார் இறந்தார்.
 
இதையடுத்து நேற்று இரவு அவரது உடல் சொந்த ஊரான சுந்தரபெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்று தகனம் செய்யப்பட்டது.
 
மறைந்த ஜி.ஆர்.மூப்பனாரின் உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஜி.ஆர்.மூப்பனாரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்.
 
பின்னர் ஜி.கே.வாசனின் கரங்களைப் பற்றிக் கொண்டு ஆறுதல் வார்த்தைகள் கூறினார். இதில் ஜி.கே.வாசன் நெகிழ்ச்சியடைந்ததோடு  நா தழு தழுக்க நன்றி கூறினார். மேலும் அங்கு கூடியிருந்தவர்களும் ஜி.கே.வாசன் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறார் தேர்தல் நேரம் வேறு இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியிருக்கிறார் இது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 
 
மேலும், எம்.எல்.ஏ மகேஷ்பொய்யாமொழி, மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம், திருவாரூர் தொகுதி வேட்பாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக கே.என்.நேரு, மயிலாடுதுறை தி.மு.க எம்பி வேட்பாளர் ராமலிங்கம் மற்றும் எம்.எல்.ஏக்கள் சாக்கோட்டை அன்பழகன், கோவி.செழியன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்
 
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணசாமி வாண்டையார், லோகநாதன், அ.தி.மு.க அமைச்சர்கள் இரா. துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, கருப்பு முருகானந்தம், அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் மாநிலப் பொருளாளர் ரெங்கசாமி மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.