கொரோனா சார்ந்த பொருட்கள், தடுப்பூசி போன்றவற்றுக்கு ஜிஎஸ்டியில் வரிவிலக்களிக்க வேண்டும், ஜிஎஸ்டி கட்டமைப்பையே மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக 43 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு 28-05-2021 அன்று நடைபெற்றது. டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதன் முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் இன்று (29-5-2021) மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,

ஜிஎஸ்டி கவுன்சிலில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு ஓட்டுதான் என்று நிர்ணயம் செய்திருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு எம்எல்ஏ என்று தேர்ந்தெடுக்கப்படுவது கிடையாது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் எம்எல்ஏக்கள் தேர்வு நடைபெறுகிறது.

அதேபோலத்தான் மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் வாக்குகள் இருக்கவேண்டும், அல்லது உற்பத்தி திறமை அடிப்படையிலாவது வாக்குகளை வைக்க வேண்டும். அதை விடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் தலா ஒரு வாக்கு என்றால், இதன் அடிப்படையிலேயே பிழை இருக்கிறது.

நம்மிடமிருந்து ஒரு ரூபாய் வரி வருவாயை மத்திய அரசு எடுத்துவிட்டு நமக்கு 25 பைசாவோ, 30 பைசாவோ தான் வருகிறது. அதேநேரம், வட கிழக்கு மாநிலங்களுக்கு 90 பைசா, 95 பைசா அளவுக்கு கொடுக்கப்படுகிறது. நமது வரிப்பணம் தான் மத்திய அரசு மூலமாக அவர்களுக்கு போகிறது.

பொதுமக்களுக்கு நலன் கிடைக்க கூடும் என்பதால் கொரோனா பொருட்களுக்கான வரியை விட்டுத்தர தமிழகம் உட்பட பெரிய மாநிலங்கள் தயாராக இருந்தோம். சிறு மாநிலங்களுக்கு அதிக பங்கு தொகை கிடைப்பதால் அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு ஓட்டுதான் இருப்பதால் நமது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை.

சில மாதங்களுக்கு அல்லது சில வாரங்களுக்கு மட்டும் கொரோனா சார்ந்த, மக்கள் உயிர்காக்கும் பொருட்கள் எவை எல்லாம் உண்டோ அவற்றுக்கு மட்டும் வரிகளை ரத்து செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளேன்.

கொரோனா சார்ந்த பொருட்கள், தடுப்பூசி போன்றவற்றுக்கு வரி இருக்க கூடாது. 5% வரி விதிக்கப்பட்டுள்ளதை பூஜ்ஜியமாக்குவதால் பெரிய அளவுக்கு இழப்பு ஏற்படாது, மக்களுக்கு நலம் கிடைக்கும் என்று வலியுறுத்தியுள்ளேன். இதுபற்றி அமைச்சர்கள் குழுவை ஏற்படுத்தி ஆய்வு செய்கிறோம் என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கட்டமைப்பு நடுங்குகிற கட்டிடம் போல இருக்கிறது. வலுவான அடித்தளம் இல்லை. முழு பரிசீலனை இல்லாமல் அவசர அவசரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசுவது உடனே நடைமுறைக்கு வர முடியாது.

நாடாளுமன்றத்தில் அது நிறைவேற வேண்டும். மாநில சட்டசபைகளில் அதேபோன்று சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இத்தனை விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. எனவே இப்போது இதை திருத்த வேண்டியது அவசியம்.

தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை 12,000 கோடிக்கு மேல் இருக்கிறது. சுமார் ஒரு லட்சம் கோடி கடன் வாங்கி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிரித்து வழங்க உள்ளதாக கூறியது. ஆனால் இதற்கு பல மாநில நிதியமைச்சர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். ஏனென்றால் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அளவு, வாங்கும் கடன் அளவை விட மிக அதிகமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினோம்.

ஜிஎஸ்எஸ் சிஸ்டம் சரியில்லை. எனவே பெட்ரோலிய பொருட்கள் உட்பட கூடுதலாக எந்த ஒன்றையும் இந்த வரம்புக்குள் கொண்டு வருவது சரி கிடையாது. கொரோனா மருந்து மற்றும் உபகரணங்களுக்கு வரியை ரத்து செய்வதால் எவ்வளவு நிதி இழப்பு ஏற்படும் என்று கேட்டபோது, மத்திய அரசின் புள்ளி விபரம் இல்லை.

சுமார் 500 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படலாம் என்று தான் நான் கருதுகிறேன். இதற்காக ஏன் இவ்வளவு யோசனை இல்லை என்பது தான் புரியவில்லை. கொரோனா சிகிச்சை பொருட்கள் மீது வரி போடுவது மனுஷத்தனத்தை குறைக்கும் செயல்” என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நான் மாநிலத்தின் பெயர் சொல்ல விரும்பவில்லை. ஆனால், முன்பு யூனியன் பிரதேசமாக இருந்து இப்போது மாநிலமாக இருக்கிறது. மேற்கு கரையில் உள்ள சிறு மாநிலம் அது. அந்த மாநிலத்தின் மக்கள்தொகை மதுரை மாவட்ட மக்கள் தொகைக்கு பாதி. மதுரை மாவட்டத்தில் சுமார் 32 லட்சம் மக்கள் இருக்கிறார்கள் .

அந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 15 அல்லது 16 லட்சம் தான் இருக்கும். ஆனால் அந்த மாநில பிரதிநிதி, பேசியது பிற மாநிலங்களை விட 10 மடங்கு அதிகம். “என் அரசியல் வாழ்க்கையின் துயரம்” அவர் பேசுவதை கேட்டது. ஏனென்றால் எந்த ஒரு பலனும் இல்லாத பேச்சு. எப்படி இது ஜனநாயக முறைப்படி நியாயம்?

உத்தர பிரதேசத்தில் 20 கோடி மக்களுக்கும் மேல் இருக்கிறார்கள். அவர்கள் பேசியது 5 நிமிடம் முதல் 8 நிமிடங்களாகும். மகாராஷ்டிரா மாநிலம் எவ்வளவு பெரிய மாநிலம். அவர்கள் பேசியது 10 நிமிடம். எனவே ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நிலை மாற்றப்பட வேண்டும். மக்கள் தொகை அல்லது பொருட்களின் உற்பத்தி அளவை வைத்து அந்தந்த மாநில நிதி அமைச்சர்கள் பேசுவதற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கை; முதல்வர் மம்தா உருக்கமான பேச்சு