‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ள நிலையில், இப்படம் 37 நாடுகளில் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படம் கடந்த மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் இப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு கேரளா சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், முதலமைச்சர் பினராயி விஜயன் வரை பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். மேலும் முஸ்லீம் அமைப்புகள் இந்த படத்துக்கு தடை கோரி போராட்டங்களும் நடத்தினர்.

தமிழ்நாட்டில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் முதல் நாள் திரையிடப்பட்ட நிலையில், சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 2வது நாள் முதல் இப்படத்தை வெளியிட மாட்டோம் என திரையரங்க நிர்வாகங்கள் முடிவு செய்து தடை செய்தனர்.

அதேபோல், வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடை விதித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 37 நாடுகளில் நாளை (12.05.2023) வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை அடா ஷர்மா வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் படத்தை பார்க்கப் போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை ட்ரெண்ட் செய்பவர்களுக்கும் என்னுடைய நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி. இந்த வார இறுதியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 37-க்கும் மேற்பட நாடுகளில் வெளியாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் குறித்து பிரதமர் மோடி கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பேசியதும், பாஜகவினர் தொடர்ந்து இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்துவருவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.