பல்வேறு தேர்வு வாரியங்களில் பயின்ற மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு 2022-23 கல்வியாண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி இந்த பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு முன்னதாக தெரிவித்தது.

மேலும், ஆர்வம் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவையும் இதில் இணைந்து கொள்ளலாம் என்றும் கூறியது.

பொது நுழைவுத் தேர்வானது தமிழ், ஆங்கிலம், இந்தி, கனடா, மலையாளம் உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் நடத்தப்படும். இந்த, தேர்வு நான்கு பிரிவுகளைக் கொண்டதாய் இருக்கும். முதல் பிரிவில் உள்ள இரண்டு பகுதிகள் தேர்வர்களின் மொழியறிவுத் திறனை சோதிப்பதாக அமையும்.

இரண்டாவது பகுதி மாணவர்களின் துறை சார்ந்த அறிவை சோதிக்கும். மூன்றாவது பிரிவு, மாணவர்களின் பொது அறிவு மற்றும் தன்னிறைவை பரிசோதிக்கும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்திருந்தது.

ஒன்றிய பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் இந்த பொது நுழைவுத் தேர்வு முறைக்கு பல்வேறு மாநிலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் நேற்று (4.3.2022) கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் எழுத்து மூலம் அளித்த பதிலில், “தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி, மாணவர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒட்டுமொத்த கல்வி மீதான சுமையைக் குறைக்கும் விதமாக 2022-23 கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக பொது நுழைவுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சம அளவிலான பல்வேறு தேர்வு வாரியங்களில் பயின்ற மாணவர்களின் திறனை மதிப்பிடுவதற்காக, இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதே வேளையில், அவர்களுக்கு சம வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒரே விண்ணப்பம் மூலம் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுவது அவர்களது கட்டணச் சுமையைக் குறைக்கும்.

மேலும், மாணவர்கள் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 13 மொழிகளில் தேர்வு எழுதவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. 12 ஆம் வகுப்பு பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான (CUET) விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை, தேசிய தேர்வு முகமையின் cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 06-5-2022 ஆகும். மேலும் ஜூலை மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.