ஸ்டெர்லைட் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என அதிமுக அரசின் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
 
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது.
 
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட், மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
 
ஆனால் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல. தீர்ப்பின் முழு விவரம் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என முதல் அமைச்சர் பழனிசாமி சட்டசபையில் நேற்று கூறினார்.
 
இந்த நிலையில், ஸ்டெர்லைட் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.
 
ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ., அதிமுக எடப்பாடி அரசு கேபினட் கூடி கொள்கை முடிவு எடுக்காமல் வேண்டும் என்றே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பேருக்கு ஒரு அரசாணையை பிறப்பித்து விட்டு நாடகம் ஆடுகிறது என்று 13 பேர் சுட்டு கொல்லப்பட்ட  நேரத்தில் இருந்தே  குற்றம் சாட்டி வருகிறது