2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருது விழா நடத்தப்படவில்லை. அந்த ஆண்டுக்கான பத்ம விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் (08-11-2021) நடைபெற்றது. தொடர்ந்து 2021 ஆம் ஆண்டிற்கான பத்ம விருது வழங்கும் விழா நேற்று (09-11-2021) நடைபெற்றது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.

மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2001-ல் பத்ம ஸ்ரீ விருதையும் 2011-ல் பத்ம பூஷண் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, இயற்கை விவசாயி பாப்பம்மாள், புதுச்சேரியை சேர்ந்த மண்பாண்டக் கலைஞர், கூடைப்பந்து வீராங்கனை அனிதா,பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர்.

பின்னணி பாடகி சித்ரா, மக்களவை முன்னாள் தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு பத்ம பூஷண், சிற்ப கலைஞர் சுதர்சன் சாஹோவுக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

கர்நாடகாவைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான நாட்டுப்புறக் கலைஞர் மஞ்சம்மா ஜோகதிக்கு பத்ம ஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். மஞ்சம்மா ஜோகதி கர்நாடக மாநிலத்தின் நாட்டுப்புற கலைகளுக்கு தலைமையிடமான ஜனபடா அகாடெமயின் தலைவராக இருந்து வருகிறார்.

அதேபோல் சுமார் 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் மகாராஷ்டிராவை சேர்ந்த விதைத் தாய் என்றழைக்கப்படும் ரஹிபாய் சோமாபூபேரேவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மேலும் சிறுவயதிலேயே பார்வையை இழந்து தனது விடாமுயற்சியால் படித்து, எழுத்தாளராகி ஏறக்குறைய 211 புத்தகங்களை எழுதியுள்ள பார்வை மாற்றுத்திறனாளி பாலன் புத்தேரி பத்ம ஸ்ரீ விருது பெற்றார். கேரளாவை சேர்ந்த இவர் மனைவியின் இறுதிச்சடங்கு நடக்கும் தருவாயில் கனத்த மனதுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் விருது பெற்றது அனைவரின் மனதையும் கலங்கச் செய்தது.