கள்ளக்குறிச்சியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். பாபு லஞ்சம் வாங்க உதவியக் குற்றத்துக்காக, அவரது உதவியாளர் செந்தில்குமாரும் கைது செய்யப்பட்டார்.

இதன் பிறகு பாபுவின் கடலூர் வீட்டில் நேற்று மதியம் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடந்த சோதனையில், பாபுவின் வீட்டில் இருந்து ரூ.35 லட்சம் பணம், 15 கிலோ வெள்ளி, 200 பவுனுக்கும் அதிகமான தங்க நகைகள், 45 வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதற்கான ஆதாரங்கள், 6 வங்கி லாக்கர்களுக்கான சாவிகள், பல கோடி மதிப்புள்ள சொத்துப் பத்திரங்கள் பாபுவின் வீட்டில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

வெறும் சோதனைக்காக வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், கட்டுக்கட்டாக இருந்த பணத்தை எண்ண முடியாமல், பணம் எண்ணும் இயந்திரத்தைக் கொண்டு வந்ததும், தங்க நகை மதிப்பீட்டாளர்களை அழைத்து வந்ததும் வெளியில் இருப்பவர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஒரு அரசு அதிகாரி தன் பெயரிலே 45 வங்கிகளில் கணக்கு வைத்து இருந்தது லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரை அதிர செய்துள்ளது என்கிறார்கள் காவல்துறையில் உள்ளவர்கள்