பெட்ரோல், டீசல் விலை 13வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 56 பைசாவும், டீசல் விலை 63 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உற்பத்தி விலைக்கும் குறைவாக சென்றபோதும், மத்திய பாஜக அரசு கலால் வரியை அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறைக்கப்படவில்லை.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலையில் ஏற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் பெட்ரோல். டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை 13 நாளில் 7.11 ரூபாய் மற்றும் டீசல் விலை 7.67 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கியமான நான்கு மெட்ரோ நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 46 பைசா உயர்ந்து 81.32 ரூபாய், டெல்லியில் 53 பைசா உயர்ந்து 77.81 ரூபாய், கொல்கத்தாவில் 51 பைசா உயர்ந்து ரூ.79.59 ரூபாய், மற்றும் மும்பையில் லிட்டருக்கு 51 பைசா உயர்த்தப்பட்டு 84.66 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல் சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு இன்று 54 பைசா உயர்ந்து 74.23 ரூபாய்க்கும், டெல்லியில் லிட்டருக்கு 64 பைசா உயர்ந்து 76.43 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 56 பைசா உயர்ந்து ரூ.71.96 ரூபாய்க்கும், மும்பையில் 61 பைசா உயர்த்தப்பட்டு 74.93 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வாசிக்க: அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்; தமிழகத்தின் இன்றைய நிலவரம்