1,200 கி.மீ. தொலைவுக்கு தனது தந்தையை பின்னால் ஏற்றிக்கொண்டு சிறுமி ஜோதி குமாரி சைக்கிள் ஓட்டிச் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
மோகன் பஸ்வான், ஹரியானா மாநிலம் கூர்கானில் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி. மோகன் பஸ்வானுக்கு ஒரு விபத்தினால் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மோகன் பஸ்வான், பீகாரில் உள்ள சொந்த கிராமத்துக்கு தனது 15 வயது மகள் ஜோதி குமாரியுடன் செல்ல முடிவுசெய்தார்.
இதையடுத்து, ஜோதி குமாரி, நடக்க இயலாத தனது தந்தையை சைக்கிளில் வைத்து சொந்த ஊருக்குப் பயணிக்க, இவர்கள் கடந்த மே 10ம் தேதி பீகாரை நோக்கி 1,200 கிமீ தூரம் சைக்கிளிலேயே பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
7 நாட்கள் இரவு பகல் பாராத தொடர் சவாரிக்கு பின்னர் கடந்த 16-ம் தேதி பீகாரில் உள்ள சொந்த கிராமத்துக்கு தந்தையுடன் சென்றடைந்தார் ஜோதி குமாரி. 1,200 கி.மீ. தொலைவுக்கு தனது தந்தையை பின்னால் ஏற்றிக்கொண்டு ஒரு சிறுமி சைக்கிள் ஓட்டிச் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க: டெல்லியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி தெளித்து சர்ச்சை
இதுபற்றி அறிந்த இந்திய சைக்கிள் ஓட்டுவோர் கூட்டமைப்பு (Indian Cycling Federation) அடுத்த மாதம் நடைபெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ள ஜோதி குமாரிக்கு அழைப்பு விடுக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தந்தையை வைத்து 1,200 கி.மீ சைக்கிள் ஓட்டிய ஜோதி குமாரியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ள நிலையில், அவருக்கு இந்த சைக்கிள் போட்டி மூலம் நல்ல எதிர்காலம் அமைய பலவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் பதிவிட்ட ட்வீட்டில், “15 வயது ஜோதி குமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமரவைத்து 1,200 தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அவருடய அன்பும், துன்பத்தை தாங்கும் மனோதிடம் கொண்ட அழகான சாதனை இந்திய மக்களையும், சைக்கிள் பந்தய கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது” என தெரிவித்து உள்ளார்.