புதிய கொரோனா திரிபு தொற்று பரவிவரும் நிலையில் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதித்திருப்பது தற்கொலைக்கு சமம் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா தொற்று பரவுவதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதியில் இருந்து திரையரங்குகள், கடற்கரை, நீச்சல் குளம், படப்பிடிப்புகள் என அனைத்து விதமான கேளிக்கைகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நவம்பர் மாதம் வரை நீடித்தது.
இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து நவம்பர் 10 ஆம் தேதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய், தமிழக முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து திரையரங்குகளில் 100% இருக்கைகளை பயன்படுத்த கோரிக்கை விடுத்தார். அதே கோரிக்கையை முன்வைத்து நடிகர் சிம்புவும் அறிக்கை வெளியிட்டார்.
இதனையடுத்து இதுவரை 50% இருக்கைகளுடன் இயக்கப்பட்டு வந்த திரையரங்குகளை 100% இருக்கைகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்ததோடு, பொங்கல் பண்டிகை முதல் தமிழகத்தில் உள்ள 1,112 திரையரங்குகளும் முழுமையாக செயல்படும் என்றும் அறிவித்து உள்ளது.
இது திரைத்துறையினரிடம் வரவேற்பை பெற்றாலும், புதிய வகை வீரியமிக்க கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் முழுமையாக திறக்கப்படுவது சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்களிடையே பெரும் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், “ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதார, தூய்மை பணியாளர்கள் என அனைவரும் இந்த கொரோனா தொற்றால் கடுமையாக அயர்ச்சியடைந்துள்ளோம்.
நாங்கள் ஹீரோக்கள் இல்லை. எங்கள் முன் கேமராக்கள் இல்லை. நாங்கள் சண்டைக் காட்சிகளில் ஈடுபடுவதில்லை. ஆனால் எங்களுக்கு மூச்சு விடுவதற்கு சற்று நேரம் தேவைப்படுகிறது. இந்த பெருந்தொற்று இன்னும் முற்றுப்பெறவில்லை.
அப்படி இருக்கையில் திரையரங்குகள் முழுமையாக செயல்படுவதற்கு அனுமதி அளித்துள்ளது தற்கொலை செய்து கொள்வவதற்குச் சமம்.
எந்த ஹீரோவும் மக்கள் கூட்டங்களுக்கு மத்தியில் அமர்ந்து படங்களை பார்க்கப்போவதில்லை. மாறாக சாமானிய மக்களே அங்கு கூட்டங்களாக இருப்பர். பணத்திற்காக வாழ்க்கையை வர்த்தகம் செய்யும் பண்டமாற்று முறையாக உள்ளது இது.
இந்த தொற்று நோயில் இருந்து நிம்மதியை பெறுவதற்கு மெதுவாக முயற்சி செய்து வாழ்வில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய முடியுமா? ஏனெனில் அது இன்னும் முழுமையாக வெளியேறவில்லை. நாங்கள் மிகவும் சோர்வடைந்துள்ளோம்.
மக்கள் உயிர்களின் மீதும் அக்கறை கொண்டுள்ளோம். எனவே திரையரங்குகளில் 100% இருக்கைகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்ததை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.