10 ஆண்டுகளுக்கு முன் இணைய ஊடகத்தில் எழுதிய கட்டுரைக்காக ஜம்மு காஷ்மீர் முனைவர் பட்ட மாணவர் ஒருவரை காஷ்மீர் மாநில புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை நீக்கிய பிறகு அங்கு தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவும் என்று கூறிய ஒன்றிய பாஜக அரசு, 3 ஆண்டுகள் ஆகியும் அங்கு தொடர்ந்து நடக்கும் துப்பாக்கிச்சூடு சண்டையால் அமைதியை கொண்டுவர முடியாமல் திணறி வருகிறது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரை ஒன்றுக்காக கல்லூரி மாணவரை தற்போது ஜாம்மு காஷ்மீர் மாநில புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் அப்துல் அலா பசில். 39 வயதான இவர் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். அப்துல் கடந்த 2011 ஆம் ஆண்டு ‘தி காஷ்மீர் வாலா’ என்ற இணைய ஊடகத்தில் “The shackles of slavery will break” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
இந்நிலையில், அப்துல் அலா பசில் எழுதிய அந்த கட்டுரை, இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, 10 ஆண்டுகள் கழித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.4.2022) அப்துல் அலா பசிலை ஜம்மு காஷ்மீர் மாநில புலனாய்வு முகமை (SIA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும் அவரது வீட்டிலும், ராஜ்பாகில் உள்ள தி காஷ்மீர் வாலா இணைய ஊடக அலுவலகத்திலும் சோதனை செய்துள்ளனர். அதேபோல் இணைய ஊடகத்தின் ஆசிரியர் மீதும் UAPA மற்றும் IPC ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்துல் அலா பசில் தனது முனைவர் பட்டம் படிப்பதற்காக மார்ச் 2021 வரை ஐந்தாண்டுகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) மௌலானா ஆசாத் தேசிய உதவித்தொகை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் கைது குறித்து தெரிவித்த ஜம்மு காஷ்மீர் மாநில புலனாய்வு முகமை, “”The shackles of slavery will break” கட்டுரையில், ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து இளைஞர்களை வன்முறையின் பாதைக்கு அழைத்து செல்லும் விதமாக அப்துலின் எழுத்துக்கள் உள்ளன என்றும்,
மேலும், போலி கருத்துக்களை கூறி பிரிவினை வாதத்தை தூண்டி நாட்டின் ஒற்றுமையை சீரழிக்கும் விதமாக இவர் எழுதியுள்ளார். இது வெறும் பொய் பிரச்சாரம் மட்டுமல்ல, பயங்கரவாத அமைப்புக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் எழுத்து” எனக் குறிப்பிட்டுள்ளது.