ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ஆம்னி பஸ் டிக்கெட், ஆட்டோ, ஓலா, ஊபர் பயணத்திற்கு ஜனவரி 1,2022 முதல் 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து அனைத்து மாநில நிதியமைச்சர்களுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி, ஒரு சில தொழில், பொருட்களுக்கு வரி விதிப்பை குறைத்தும், சிலவற்றிற்கு அதிகரித்தும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் சீர்திருத்தங்களை செய்து வருகிறது.
இந்நிலையில் ஒன்றிய பாஜக அரசு தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்பில் சில மாற்றங்களை கொண்டுவந்து புத்தாண்டு நாளான ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமுல்படுத்த உள்ளது. அதில் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளும் அனைத்து சேவைகளுக்கும் புதிதாக ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
ஏற்கனவே ரயில், ஏ.சி. பஸ்களில் பயணம் செய்ய 5% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இருப்பினும் ஓலா, ஊபர், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
புத்தாண்டில் இருந்து ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்கிற அனைத்து பயணத்திற்கும் 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற சனிக்கிழமை (1.1.2022) முதல் வாடகை கார், ஆட்டோக்களை புக் செய்யும்போது அதற்கு பயணிகள் 5% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
இதுவரையில் ஓலா, ஊபர், கார்களுக்கும் ஆட்டோக்களுக்கும் செல்லக்கூடிய இடத்திற்கு கிலோ மீட்டர் கணக்கிடப்பட்டு வாடகை கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டது. இனிமேல் அதற்கு 5% ஜிஎஸ்டி கூடுதலாக வசூலிக்கப்படும். ஆட்டோவை பொறுத்தவரை ஆன்லைன் அல்லாத சேவைக்கு ஜிஎஸ்டி கிடையாது.
ஆம்னி பஸ்களில் ஏ.சி. பஸ்களுக்கு மட்டும் ஏற்கனவே 5% ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. 1 ஆம் தேதி முதல் குளிர்சாதன வசதி இல்லாத ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யப்படுகிற பஸ்களுக்கும் புதிதாக ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. காலணி மற்றும் ரெடிமேடு மற்றும் அனைத்து ஜவுளி வகைகளுக்கு 12% ஜிஎஸ்டி.க்குள் கொண்டு வரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.