ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
 
ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது.
 
இதையடுத்து, இந்தியாவிலும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.
 
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார்.
 
அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கிய துபாய் நீதிமன்றம் மைக்கேலை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டது.
 
இந்த நிலையில் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார்.
 
பின்னர் டெல்லி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டார். சிபிஐ தலைமை அலுவலகம் கொண்டு வரப்பட்ட அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
 
முன்னதாக கிறிஸ்டியன் மைக்கேல் தனது வழக்கறிஞரை 5 நிமிடங்கள் சந்தித்து பேச நீதிபதி அனுமதி வழங்கினார். பின்னர் மைக்கேலுக்கு சிபிஐ காவல் வழங்க அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
 
அவர் மீதான குற்றத்தை தொடர்பு படுத்தும் எந்த ஆதாரத்தையும் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யவில்லை என அவரது வழக்கறிஞர் கூறினார்.
 
ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கினார். இதனிடையே மைக்கேலை ஜாமீனில் விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டிசம்பர் 10-ம் தேதி விசாரிப்பதாக நீதிபதி கூறினார்.