குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், விமானி ஒருவர் மட்டும் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
கோவையில் உள்ள ராணுவ மையத்தில் இருந்து IAF MI-17V5 என்ற ராணுவ ஹெலிகாப்டரில் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள், விமானிகள் என மொத்தம் 14 பேர் பயணித்தனர்.
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
உடனடியாக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன், நீலகிரி கலெக்டர் அம்ரித், எஸ்.பி., ஆசிஸ் ராவத் ஆகியோர் விபத்து நடந்து பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும் முப்படைகளின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதனையடுத்து ஊட்டி- குன்னூர் இடையே சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் டி.என்.ஏ., பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் ஹெலிகாப்டரில் சென்ற முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய ஒருவர் விமானி வருண் சிங் மட்டும் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வெலிங்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீட்கப்பட்டுள்ள கேப்டன் வருண் சிங் 2020 ஆம் ஆண்டு LCA தேஜாஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் அவருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்:
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிபின் ராவத். அவரது குடும்பம் பல தலைமுறைக்காக ராணுவத்தில் பணியாற்றி வருகிறது. இவர் டேராடூன், சிம்லா, தமிழகத்தின் வெலிங்டன் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவக் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றுள்ளார். மேலும் அமெரிக்காவில் ராணுவம் குறித்து பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் இந்திய இராணுவ அகாடமி (IMA) ஆகியவற்றில் பட்டம் பெற்ற பிறகு, பிபின் ராவத் 1978 டிசம்பரில் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டார். 11-வது கோர்க்கா ரைபிள்ஸின் ஐந்தாவது பட்டாலியனாக அவரது தந்தை பணியாற்றிய அதே படையில் உயரதிகாரியாகப் பதவியேற்றார் பிபின் ராவத்.
மலைப்பகுதிகளில் போர் புரிவதிலும், ஆட்சிக்கு எதிரான குழுக்களை ஒடுக்குவதில் இவர் கைதேர்ந்தவர். நாடு முழுவதும் பல்வேறு ராணுவப் படைக்குத் தலைமை தாங்கியிருந்தாலும், ராணுவத்திற்கான கல்வி தேடலில் மிகுந்த ஆர்வம் கொண்டனர். இதனால் தான் 2011 ஆம் ஆண்டு ராணுவ போர்த்திறன் குறித்த ஆய்வுக்காக சௌத்ரி சரண் சிங்க பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணினி அறிவியலில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு காங்கோ நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சார்பாக அனுப்பப்பட்ட அமைதிக் குழுவில் இந்தியாவின் சார்பாக சென்ற பிரதிநிதிகளில் ஒருவர் பிபின் ராவத்.
இந்திய ராணுவத்தில் பிரிகேட் கமாண்டர், ஜெனரல் ஆபீசர் கமாண்டிங்-இன்-சீஃப் தெற்கு கமாண்ட், ஜெனரல் ஸ்டாஃப் ஆபிசர் கிரேடு 2, ராணுவ நடவடிக்கை இயக்குனரகம், கர்னல் ராணுவச் செயலர் மற்றும் துணை ராணுவச் செயலர் ஆகிய மிகப்பெரிய பதவிகளை பிபின் ராவத் வகித்துள்ளார். இராணுவச் செயலாளரின் கிளை மற்றும் ஜூனியர் அதிகார கட்டளைப் பிரிவில் மூத்த பயிற்றுவிப்பாளராகவும் இருந்துள்ளார்.
டிசம்பர் 17, 2016 அன்று ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக்கிற்குப் பிறகு, நாட்டின் 27-வது இந்திய ராணுவத் தளபதியாக பிபின் ராவத் பதவியேற்றார். அதன்பின்னர் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது தான் முதன் முதலில் இந்தியாவில் அந்த பதவி உருவாக்கப்பட்டது.
பிபின் ராவத் தனது திறமையான சேவைக்காக பரம் விசிஷ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஷ்ட் சேவா, விசிஷ்ட் சேவா, யுத் சேவா மற்றும் சேனா உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.