விவசாயிகளுக்கு எதிரான சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் புதிய 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. விவசயிகளுக்கு எதிரான இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டங்களைத் தொடங்கினர்.
ஓராண்டுக்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தில் இதுவரை 750க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கடந்த நவம்பர் 19 ஆம் தேதி தீடீரென வேளாண் சட்டங்களை திரும்பப் பெற அரசு திட்டமிட்டிருப்பதாகவும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (29.11.2021) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 29 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
பாராளுமன்றம் இன்று கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் ஆஸ்கர் பெர்ணான்டஸ், கல்யான் சிங், செங்குட்டுவன் உள்பட 8 பேருக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கேள்வி நேரம் தொடங்கியதும் கேள்வி கேட்கப்பட்டது.
அதன்பிறகு வேளாண் சட்டத்தால் விவசாயிகள் மரணமடைந்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
12 மணிக்கு பிறகு பாராளுமன்ற மக்களவை கூடியதும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவை ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் சபாநாயகர் இதை ஏற்க மறுத்து விட்டார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு இடையே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஓரிரு நிமிடங்களில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறுவதை விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ள போதிலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் கூறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது. இதற்காக ஒத்திவைப்பு தீர்மானத்தை திமுக சார்பில் டி.ஆர்.பாலு இன்று கொடுத்தார். இதேபோன்று பல்வேறு கட்சிகளும் தங்கள் மாநில விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்று மனு கொடுத்தன.