மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான வேதா இல்லத்தை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியுள்ள உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து, வேதா இல்லத்தை மீட்பேன் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் இருவரையும் 2-ம் நிலை சட்டப்படி வாரிசுகளாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது. இழப்பீட்டு தொகையை செலுத்தியதால் அரசுடைமையாக்கப்பட்டு விட்டதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் ஜெயலலிதாவின் வீடு இன்று அரசுடைமையாக்கப்பட்டது. இதற்கு அவரது அண்ணன் மகள் தீபா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஜெ.தீபா, “அரசின் அறிவிப்பை எதிர்த்து சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்ய இருக்கிறேன். இது அரசு சொத்து அல்ல; தனியார் சொத்து.
தற்போது நியாயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். என்னுடைய அத்தை மக்களுக்காகவும், அரசுக்காகவும் சேவை செய்து விட்டுதான் போயுள்ளார். அப்படி இருக்கும்போது ஒரே குடும்பத்தில், உறுப்பினர்கள் நிம்மதியாக இருக்க முடியாமல் தொடர்ந்து வழக்குகள், சர்ச்சைகளை உருவாக்குவது, அதிமுக அரசாக இருக்கட்டும் வேறு யாராக இருந்தாலும், அவர்கள் கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க வேண்டும்.
அவர்களது நினைவு அந்த இல்லத்தில் உள்ளது. அவர்கள் பெரிய தலைவர் ஆவதற்கு முன்பு குடும்ப உறவுகளுடன் இருந்தவர். அந்த வகையில் எங்களது குடும்ப பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்று ஆசைபட்டுதான் வழக்கு தொடுத்தோம். மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். அவங்களுக்கு ஆசை பாசங்கள் இருந்தது. அவரை பொது சொத்தாக அறிவிப்பதையே நான் விரும்பவில்லை.
வேதா இல்லத்தை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. அரசியல் காரணங்கள் இதில் இருக்கிறது. சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன். இது முடிவு அல்ல, இனிதான் ஆரம்பம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க: ஜெயலலிதா வீட்டை 68 கோடி கொடுத்து வாங்கும் அதிமுக அரசு…