சென்னையில் வீட்டைவிட்டு வெளியே செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 98 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக 205 ஆக உள்ளது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த, முகக்கவசம் அணிவது உடனடியாக கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டை விட்டு வெளியே செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிக்கொண்டு வெளியே வந்தால் அந்த வாகனத்திற்கான அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும் என்றும், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு திரும்ப பெற முடியாது என்றும் சென்னை மாநாகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.