நடிகர் சிம்பு மீது சினிமா பட தயாரிப்பு நிறுவனமான பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில், நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து “அரசன்” படத்தை தயாரிக்க திட்டமிட்டதாகவும், இதற்காக அவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் பேசி, முன்பணமாக ரூ.50 லட்சத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி வழங்கியதாகவும் கூறியிருந்தனர்.
ஆனால், தங்களுடன் செய்த ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு “அரசன்” படத்தில் நடிக்க முன்வராமல் இழுத்தடித்தாகவும், இன்று வரை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை, சிம்புவும் கால்ஷிட்டே கொடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தனர். அதனால்முன்பணம் ரூ 50 லட்சம், அதற்கு வட்டி ரூ 33.50 லட்சம் சேர்த்து ரூ.85.50 லட்சம் திரும்பப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி மெ.கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்பு நடிகர் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ.50 லட்சத்தை ரூ.35.50 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.85.50 லட்சம் திருப்பிச் செலுத்த வேண்டும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இந்த தொகையை 4 வாரத்தில் அவர் செலுத்த வேண்டும். இல்லையெனில் நடிகர் சிம்பு வீட்டில் உள்ள வீட்டு உபயோக பொருட்களான ரெப்ரிஜிரேட்டர், டி.வி, வாஷிங்மெஷின், கட்டில், ஷோபா செட், மின் விசிறிகள், கிரைண்டர், மிக்ஸி, ஏர்கண்டிஷனர், டைனிங் டேபிள், சேர்கள் மற்றும் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஜப்தி செய்யலாம் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
முன்னதாக இது தொடர்பான சிம்பு தரப்பு வாதத்தில், “குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு தொடங்காததால் தனக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அட்வான்ஸ் தொகையை திருப்பித்தர இயலவில்லை என்றும் வாதாடப்பட்டது. அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது”.
சிம்பு தற்போது தான் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் செக்கச்சிவந்த வானம், கான், வாலிபன், வேட்டைமன்னன், மாநாடு என படங்களில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் இப்புதிய சர்ச்சை ஆரம்பமாகியுள்ளது.