விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வரும் 8 ஆம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் 7 வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் 35 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதில், விவசாயிகள் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட 5 பேர் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முன்வந்தது. ஆனால், அதை விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்க மறுத்து, வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வரும் 8ம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக வட இந்தியா முழுவதும் 8 ஆம் தேதி லாரிகள் ஓடாது என்றும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யாவி்ட்டால் நாடு முழுவதும் லாரிகள் இயங்காது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை தோல்வியால் பாஜக கலக்கம்