இலங்கையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 என்கிற பெயரில் இந்தி படம் உருவாகி வருகிறது. கபிர் கான் இயக்கி வரும் 83 படத்தில் கபில் தேவாக ரன்வீர் சிங்கும், அவரின் மனைவியாக தீபிகா படுகோனேவும் நடித்து வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு ரன்வீர் சிங்கும், தீபிகாவும் ஜோடியாக நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இலங்கையை சேர்ந்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும் படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதில், முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் எடுத்த சாதனை படைத்தவர். அதனால் அவர் சாதனையை குறிக்கும் வகையில் படத்திற்கு 800 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி, சங்கத்தமிழன், லாபம், மாமனிதன், உப்பென்னா ஆகிய படங்கள் இந்தாண்டு வெளியாக இருக்கின்றன.
சிரஞ்சீவியின் வாழ்க்கை வரலாற்று படமான சயீரா நரசிம்ம ரெட்டியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி வைஷ்ணவ் தேஜின் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். வைஷ்ணவ் தேஜ் பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் ஆவார்.