சமீபத்தில் ஆந்திராவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் எம்.எல்.ஏ.வும், முன்னாள் எம்.எல்.ஏ.வும் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தாக்கப்பட்டுள்ளார். அவரை சிறிய கத்தியால் மர்ம நபர்கள் பின்னால் இருந்து குத்தியுள்ளனர்.
அவரை சிறிய கூர்மையான கத்தியால் மர்ம நபர் ஒருவர் தாக்கினார். பின்புறமாக அவர் கத்தியை கொண்டு குத்தியதில் ஜெகன் மோகன் ரெட்டியின் முதுகில் ரத்தம் கொட்டியது. காயமடைந்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஜெகன் மோகன் ரெட்டியை கத்தியால் குத்தியவர் அடையாளம் காணப்பட்டார். அவருடன் செல்பி எடுக்க முயற்சி செய்த அந்த நபர் கத்தியால் குத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெகன் மோகன் ரெட்டியை தாக்கியவர் ஸ்ரீனு எனவும் அவர் விமான நிலையத்தில் விடுதி பணியாளராக உள்ளார் எனவும் போலீஸ் தெரிவித்துள்ளது. அவர் கிழக்கு கோதாவரியை சேர்ந்தவர் எனவும், காவலில் எடுக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் என்சி ராஜப்பா பேசுகையில், “விசாகப்பட்டினத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கிறது,” என்றார்.
மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “ஜெகன்மோகன் ரெட்டி மீதான தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முழுமையான விசாரணையை மேற்கொள்ள அனைத்து பாதுகாப்பு முகமைகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளேன். கோழைத்தனமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன், குற்றவாளி தண்டிக்கப்படுவார். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது,” என தெரிவித்துள்ளார்