வடமாநில தொழிலாளர் பிரச்சினையில் வதந்தி பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் போலி வீடியோக்கள் பரப்பப்பட்டன. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இவ்விஷயத்தில் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்தார். மேலும் தமிழக காவல் துறையும் இவ்விஷயத்தில் கடும் எச்சரிக்கையை விடுத்திருந்தது.
இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. “வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா தமிழக முதலமைச்சர்?” என்ற தலைப்பில் வெளிடப்பட்ட அறிக்கையில் திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள் வடமாநிலத்தவர்களை பற்றி ஏளனமாக பேசிய பேச்சுக்களை குறிப்பிட்டு இருந்தார்.
இதனையடுத்து அண்ணாமலை மீது வதந்தி பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல், மத ரீதியான பிரிவினையை ஏற்படுத்துதல், இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்!” என்று தமிழக அரசுக்கு சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.