வடகொரியா முன்னாள் அதிபர் கிம் ஜோங் இல்லின் நினைவு தினத்தை முன்னிட்டு, மக்கள் சிரிப்பதற்கும், அழுவதற்கும் 10 நாட்கள் தடை விதித்து வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது.
வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜோங் இல் தனது 69 வயதில் 2011ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். கிம் ஜோங் இல் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்நாட்டில் 10 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் முடிவு செய்துள்ளார்.
இதனால் நாட்டு மக்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை வடகொரிய அரசு விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “கிம் ஜோங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி 10 வடகொரியாவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, வரும் 10 நாட்களில் குடிமக்கள் யாரும் சிரிக்கவும் கூடாது, மது அருந்தக் கூடாது, பிறந்தநாள் கொண்டாடக் கூடாது, மால்களுக்குச் செல்லக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை வடகொரிய அரசு விதித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பொதுமக்கள் அனைவரும் எந்தவித கேளிக்கை, கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது. வீடுகளில் யாராவது இறந்தாலும் கூட சத்தம் போட்டு அழக்கூடாது. இந்த உத்தரவை மீறுபவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு உடனே கைது செய்யப்படுவர் என தெரிவித்துள்ளது.