காஷ்மீரைத் தொடர்ந்து தற்போது லட்சத்தீவை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கும் வேலையை செய்யும் பாஜக மோடி அரசிற்கு எதிராக SaveLakshadweep என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக உள்ளது. நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படுவதுடன், பல ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். ஒன்றிய பாஜக அரசின் செயலற்ற தன்மையால் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமுடக்கத்தை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உள்ளது.
இதனால் அத்தியாவசியத் துறைகள் தவிர மற்ற துறைகள் இயங்க, பல்வேறு மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தி சார்ந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டு, பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
இந்தியாவில் சுமார் 90% மேல் மக்கள் கடும் வறுமையை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால் இதனைப் பற்றிக் கவலைப்படாத மோடி அரசு, மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்யாத இடங்களில் ஆட்சியை கலைப்பது, அம்மாநில அரசுகளை செயல்படாமல் தடுப்பது போன்ற தனது அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
அதேவேளையில், புதிய கல்விக்கொள்கை, இந்தி திணிப்பு, கார்ப்பரேட்டுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டு ஆகியவற்றை தொடர்ச்சியாக செய்து வருகிறது. ஏற்கெனவே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து கார்ப்பரேட்டுக்கு கூறுபோடும் நடவடிக்கையை மேற்கொண்ட மோடி அரசு, தற்போது லட்சத்தீவை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கும் வேலையை முனைப்புடன் செய்து வருகிறது.
இந்திய கூட்டமைப்பின் மிகச்சிறிய யூனியன் பிரதேசம் தான் லட்சத்தீவுகள். மிகச்சிறிய பரப்பளவு கொண்டுள்ளதால், அங்கு வாழும் இஸ்லாமிய பழங்குடி மக்களின் நலனை பாதுகாப்பதற்காக முன்னாள் பிரதமர் நேரு பல சிறப்பு நடவடிக்கைகளைக் கொண்டு வந்தார்.
குறிப்பாக, நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தவுடனே, லட்சத்தீவுக்கென பிரத்யேக நிலவுரிமை சட்டத்தை உருவாக்கியது. இந்த நிலவுரிமை சட்டத்தின் அடிப்படை அம்சமே, லட்சத்தீவை பூர்வீகமாக கொண்ட தாய், தந்தையருக்கு பிறப்பவர் மட்டுமே தீவுகளில் நிலம் வாங்க முடியும் என்பது தான்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதி பழங்குடி மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், அந்த தீவுகளை உள்ளடக்கிய கூட்டுறவுத்துறை மூலம் தொழில் வளர்ச்சியும் அதிகரித்தது. இத்தகைய சூழலில், ஆளுநர் மூலம் தனது அதிகாரத்தை ஒரு மாநிலத்தின் மீதோ, ஒரு யூனியன் பிரதேசத்தின் மீதோ செலுத்திவரும் பாஜக தற்போது அதே பாணியை கையில் எடுத்துள்ளது.
முன்னதாக லட்சத்தீவின் நிர்வாகியாக செயல்பட்டு வந்த ஐ.பி.எஸ் அதிகாரி தினேஷ்வர் வர்மாவை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகியாக பிரஃபுல் கோடா பட்டேலை மோடி அரசாங்கம் நியமித்தது. அதன்மூலம் ஆளுநர் பிரஃபுல் பட்டேல் மூலம் தொடர்ச்சியான கட்டுப்பாடுகளையும், மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மோடி அரசு செய்து வருகிறது.
குறிப்பாக லட்சத்தீவை பூர்வீகமாக கொண்டவர்கள் மட்டுமே தீவுகளில் நிலம் வாங்க முடியும் என்ற நிலவுரிமை சட்டத்தை தளர்த்தி யார் வேண்டுமானாலும் இடம் வாங்கலாம் என வழிவகை செய்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக லட்சத்தீவில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இஸ்லாமிய பழங்குடிகளின் விருப்ப உணவான மாட்டுக்கறிக்கு தடைவித்தது மட்டுமின்றி, பள்ளிகளிலும் அசைவ உணவிற்கு தடைவிதித்துள்ளது.
மேலும் 100% மதுவிலக்கு அமலான லட்சத்தீவில், மதுவிலக்கை நீக்கி அரசு சார்பாக மதுக்கடை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு தொடர்ந்து நஷ்டம் அடையாமல் இருந்துவரும் லட்சத்தீவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை கலைத்துவிட்டு, குஜராத்தைச் சேர்ந்த Amul Corporation கம்பெனிக்கு பால் பொருட்களை விற்பனை வழிவகை செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது, உள்துறை அமைச்சகத்தின் குற்ற வழக்குகள் குறித்த என்சிஆபின் வருடாந்திர அறிக்கையின் படி, இங்கு பெண்களுக்கெதிரான வன்கொடுமை வழக்கு, கொலை, குழந்தை கடத்தல் என ஒரு குற்றம் கூட பதியப்படவில்லை. அப்படி இருக்கையில், இத்தகைய மாநிலத்தை குற்றமில்லா மாநிலமாக மாற்றுவதாக கூறி, குண்டர் சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார் ஆளுநர்.
இதன் மூலம் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய அதிகாரம் வழங்கப்படும் என்ற அச்சம் அங்குள்ள மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. லட்சத்தீவுகளின் மக்கள்தொகையை கட்டுப்படுத்த 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் நிற்கும் தகுதி இல்லை என சட்டம் பிறப்பித்துள்ளார்.
மேலும் முன்களப் பணியாளர்களான செவிலியர்கள் குறைந்தபட்ச ஊதியத்துக்காக போராடிய போது, அவர்களுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் கைது செய்துள்ளனர் அம்மாநில நிர்வாகி பிரஃபுல் படேல் தலைமையிலான காவல்துறை.
செவிலியர்களின் கைது நடவடிக்கைக்கு பிறகு ஜனவரி வரை கொரோனா இல்லாத தீவாக இருந்த இங்கு 5000 பேருக்கு மேல் தற்போது கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சமீபத்தில் லட்சத்தீவுகளை புரட்டிப்போட்ட தவுக்டே புயலால் பல பகுதிகள் சேதம் அடைந்துள்ளன.
மீனவர்கள் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஆனால் நிவாரணம் தரவேண்டிய அரசோ, அப்பகுதி மக்களுக்கு எதிராக பல்வேறு முறைகேடுகளை நிகழ்த்தி வருகிறது.
இந்த முறைகேடுகளையும் ஆளுநராக நியமிக்கப்பட்ட பிரஃபுல் பட்டேல் மாற்றவேண்டும் என முறையிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட, டாட்ரா நாகர் ஹவேலி நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் டேல்கர் பல இன்னல்களுக்கு ஆளாகி, கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
தனது தற்கொலை முடிவுக்கு பிரஃபுல் படேல் தான் காரணம் என 15 பக்க அளவில் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார். ஆனால் அந்த தற்கொலை வழக்கு, எப்ஐஆரில் தற்போது வரை பிரஃபுல் பட்டேல் சேர்க்கப்படவில்லை. மேலும் தன்னுடைய ஆளுநர் பதவியை வைத்து இந்த வழக்கிலிருந்து அவர் தப்பிக்க ஆயுதமாக பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், கேரள நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் பிரபலங்கள் பலரும் SaveLakshadweep என்ற ஹேஷ்டேக்குடன் லட்சத்தீவிற்கு ஆதரவாக தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வேளாண் சட்டம் எதிர்ப்பு; மோடி பிரதமரான மே 26 ஆம் தேதி விவசாயிகள் கருப்பு தினப் போராட்டம்