லட்சத்தீவில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற பிரதமர் தலையிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத்தீவுக்கு புதிய நிர்வாகியாக குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிரஃபுல் படேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக மோடி அரசால் நியமிக்கப்பட்டார். அப்போது முதல் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.
இதனைத்தொடர்ந்து லட்சத்தீவின் புதிய நிர்வாகி பிரஃபுல் படேலை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சினைக்குரிய அதிகாரி பிரஃபுல் பட்டேலை திரும்பப்பெற வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “லட்சத்தீவில் பிரஃபுல் படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இஸ்லாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது. பிரதமர் தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும். பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்” என வலியுறுத்தியுள்ளார்.
#Lakshadweep-இல் திரு. பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இசுலாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது.@PMOIndia தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும்.
பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்!
— M.K.Stalin (@mkstalin) May 27, 2021
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “லட்சத்தீவின் நிர்வாகி பிரஃபுல் படேல் அறிவித்துள்ள மக்கள் விரோத கொள்கைகளால் அத்தீவு மக்களின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது.
மக்கள் பிரதிநிதிகளிடமோ அல்லது பொதுமக்களிடமோ முறையாக ஆலோசிக்காமல் பெரும் மாற்றங்களை முன்வைத்துள்ளார். இந்த தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக லட்சத்தீவு மக்கள் போராடுகின்றனர்.
தீவின் சுற்றுச்சூழல் புனிதத்தை குலைக்கும் அவரது முயற்சிக்கு சமீபத்தில் வெளியிடப்பட்ட லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை வரைவே சாட்சி. அவ்விதி நில உரிமை தொடர்பான பாதுகாப்புகளை வலுவிழக்கச் செய்கிறது.
சுற்றுச்சூழல் விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்வதுடன், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கிடைக்கக்கூடிய சட்ட உதவிகளை கடுமையாக கட்டுப்படுத்துகிறது. குறுகிய கால வணிக லாபங்களுக்காக வாழ்வாதார பாதுகாப்பும், நிலையான வளர்ச்சியும் தியாகம் செய்யப்படுகின்றன.
Lakshadweep is India’s jewel in the ocean.
The ignorant bigots in power are destroying it.
I stand with the people of Lakshadweep.
— Rahul Gandhi (@RahulGandhi) May 26, 2021
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களை தேர்தலில் தகுதி நீக்கம் செய்யும் பஞ்சாயத்து ஒழுங்குமுறை வரைவில் உள்ள விதி அப்பட்டமான ஜனநாயக விரோதம். மேலும் குண்டர் சட்டம், லட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை, மது விற்பனை மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல் போன்றவை உள்ளூர் சமூகத்தின் கலாச்சாரம் மீதான திட்டமிட்ட தாக்குதல்.
தயவுசெய்து இந்த விஷயத்தில் தலையிட்டு மேற்கூறிய உத்தரவுகளை திரும்பப் பெறச்செய்யும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன். லட்சத்தீவு மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மதிக்கும், விருப்பத்தை பிரதிபலிக்கும் ஒரு வளர்ச்சிக்கு தகுதியானவர்கள்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
லட்சத்தீவை சூறையாடும் பாஜக மோடி அரசு; ட்ரெண்டிங்கில் #SaveLakshadweep