சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தப்ரீ ஆலம். இவர், கடந்த 2016ம் ஆண்டு சென்னைக்கு பணி காரணமாக வந்துள்ளார்.
அப்போது அண்ணா சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளார். சாப்பிட்டு முடித்ததும் உணவுக்கான தொகைக்கு சர்வர் பில் கொடுத்துள்ளார்.
அதில், சேவை கட்டணம் ₹9.90 என்று குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தப்ரீ ஆலம், ‘‘சேவை கட்டணம் என்று தனியாக ஏன் வசூலிக்கிறீர்கள்?’’ என கேட்டுள்ளார்.
அதற்கு ஓட்டல் நிர்வாகம் சரியாக பதில் அளிக்கவில்லை. மேலும் அந்த தொகையை சேர்த்து செலுத்த அறிவுறுத்தி உள்ளது. இதனால் வேறுவழியில்லாமல் தொகையையும் சேர்த்து செலுத்தி உள்ளார்.
இதன் பின்னர், சேவை கட்டணம் என்ற பெயரில் உணவக நிர்வாகம் தன்னிடம் பணம் வசூலித்தது தவறு என்று கூறி தன்னிடம் வசூலித்த தொகையை திரும்ப வழங்கவும், மன உளைச்சலுக்காக ₹1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட கோரி சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் தப்ரீ ஆலம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி மோனி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘ஓட்டல்களில் அன்பளிப்பு என்ற பெயரில் சேவை கட்டணம் வசூலிப்பது தவறு.
இதன்மூலம் இந்த சேவை கட்டணத்துக்கும் சேர்த்து சேவை வரியை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டி உள்ளது. சேவை கட்டணம் என்பது வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பொறுத்தது என்று இந்திய ஓட்டல்கள் சங்கம் தெளிவாக கூறி உள்ளது’’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, மத்திய அரசின் சுற்றறிக்கையின்படி ஓட்டல்களில் சேவை கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது.
எனவே, ஓட்டல் நிர்வாகம் சேவை கட்டணம் என்ற பெயரில் மனுதாரரிடம் வசூலித்த ₹9.90 காசை திரும்ப கொடுக்க வேண்டும்.
மேலும் மன உளைச்சலுக்காக ₹10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ₹5 ஆயிரமும் உணவக நிர்வாகம் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இறுதியில் 9.90 ரூபாய்க்கு ஆசைபட்ட நிர்வாகம் 15009.90 ரூ இழந்தது தான் மிச்சம்