புல்வாமா தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் 150க்கும் மேற்பட்ட பிரிவினைவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
மேலும் 10 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் நேற்று அதிரடியாக குவிக்கப்பட்டனர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
 
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு, இதற்கு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
 
மேலும், காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அனைத்தையும் திரும்பப் பெற்றது.
 
இதைத் தொடர்ந்து, பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரிவினைவாத தலைவர்களை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடியாக கைது செய்தனர். இவர்களில் பலர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பின்னர், சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
அனந்த்நாக், பகால்கம், தியால்கம், டிரால் உள்ளிட்ட தெற்கு காஷ்மீர் பகுதிகளில் கைது செய்யப்பட்ட பிரிவினைவாத தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை சேர்ந்தவர்கள் ஆகும் என ஏஜென்சி தகவல்கள் தெரிவிக்கின்றன .
 
மேலும்பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிரிவினை
வாத இயக்கங்களின் தலைவர்களான யாசின் மாலிக், அப்துல் ஹமித் பயாஸ், குலாம் காதிர் லோனே, அப்துல் சலாம், குலாம் முகமது தர், முகமது ஹயாத் உள்ளிட்ட மத்திய, மாவட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
 
அவர்களில் சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினரின் திடீர் கைது நடவடிக்கையாலும், எதற்காக கைது செய்கிறார்கள் என்பதை கூறாததாலும் மாநிலம் முழுவதும் குழப்பம் நிலவுகிறது.
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் 35-ஏ பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இதை எதிர்த்து காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவும், மாநில அரசுக்கு உதவவும் 10 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் நேற்று கூடுதலாக குவிக்கப்பட்டனர்.
 
மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 45 கம்பெனி, எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 35 கம்பெனி, எல்லை ஆயுதப் படையை சேர்ந்த 10 கம்பெனி, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையை சேர்ந்த 10 கம்பெனி என மொத்தம் 100 கம்பெனி துணை ராணுவத்தினர் இதில் இடம் பெற்றுள்ளனர். இந்த நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
 
 
காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டதற்கு, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், மெகபூபா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கடந்த 24 மணி நேரத்தில் ஹுரியத் தலைவர்கள், ஜமாத் அமைப்பின் தலைவர்கள், தொண்டர்கள் காரணமின்றி கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
காவல் துறையின் தன்னிச்சையான இந்த செயலை புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த கைது நடவடிக்கை ஜம்மு காஷ்மீரில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும்’ என கூறியுள்ளார்.
 
ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் மிர்வாஸ் உமர் பரூக் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஜம்மு காஷ்மீரில் படைகளை குவிப்பதும், வலிமையை காட்டுவதும், மிரட்டல் விடுப்பதும் நிலைமையை மோசமடைய செய்யும்’ என கூறியுள்ளார்.