விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றப்பட்டு, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய உயரிய விருது ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதாகும். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் 1991- 92 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வருடம் தோறும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
விளையாட்டுத்துறையில் மிகச்சிறந்த சாதனைகளை நிகழ்த்திய வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மாரியப்பன் தங்கவேலு, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால்,
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய ஐந்து பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருது, தேசிய விளையாட்டுத் தினமான ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றப்பட்டு, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
[su_image_carousel source=”media: 25403,25404″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]
நாடு முழுவதும் உள்ள மக்களிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று இந்த விருதின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் இந்த பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய ஹாக்கி விளையாட்டு வீரரான தயான்சந்த், 1926 முதல் 1949 வரை சர்வதேச ஹாக்கி போட்டிகளில் விளையாடியவர். 185 ஆட்டங்களில் 570 கோல்கள் அடித்துள்ள தயான்சந்த், பங்கேற்ற மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. தயான்சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29, இந்தியாவில் தேசிய விளையாட்டுத் தினமாகக் கொண்டாடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.