ரஷியா கண்டுபிடித்த ஸ்பூட்னிக்-5 கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் 100 தன்னார்வலர்கள் மீது செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு சோதனைகள் பல்வேறு கட்டங்களில் நடந்து வருகின்றன. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தடுப்பூசியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையில், ரஷியா தனது ஸ்பூட்னிக்-5 தடுப்பு மருந்து அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது.
இந்த மருந்தை தனது மகளுக்கு கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததாக ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்கமாக அறிவித்தார். இதையடுத்து ரஷிய அரசு தயாரித்துள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவுக்கு வழங்க, ரஷியா நேரடி முதலீடு நிதியம் (ஆர்டிஐஎப்) மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவிற்கு 10 கோடி மருந்துகளை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) தெரிவித்துள்ளது. பரிசோதனைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டிஸ் நிறுவன ஆய்வகங்களுக்கு டிசிஜிஐ அனுமதி வழங்கியுள்ளது.
2ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் 100 பேருக்கும், 3ம் கட்ட பரிசோதனையில் 1,400 பேருக்கும் மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்படும் என டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க: மோடியின் பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிராக டிரெண்டான #GobackModi