ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரஜினி குறித்த பாடம் இடம்பெற்றது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியை விட கமல் தான் அதிகம் உழைத்தவர் என்றும், ரஜினி குறித்து பாடம் வைத்திருப்பது வேண்டுமென்றே செய்த செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய பாடத்திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘ரேக்ஸ் டூ ரிச்சஸ் ஸ்டோரீஸ்’ என்ற பாடத்தில் உழைப்பால் உயர்ந்தவர்கள் குறித்த பாடம் ஒன்று உள்ளது. அதில் ரஜினி குறித்த பாடம் அவரது புகைப்படத்துடன் உள்ளது. கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த் தனது கடுமையான உழைப்பால் திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாகவும் திகழ்வதாக அந்த பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரஜினியின் பெயர் இருந்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ரஜினி குறித்த பாடத்திற்கு முதல்முறையாக சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திரைத்துறையில் அதிகம் உழைத்தது கமல்தான் என்றும் அவரது பாடம் தான் உண்மையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியலில் உயர்வதற்கு உழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால் போதும் என்றும் சீமான், கமல்ஹாசனை விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.