யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் நள்ளிரவில் இடிக்கப்பட்டதால் போராட்டம் வெடித்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தரின் உத்தரவின் பேரில், முள்ளிவாய்க்கால் நினைவு தூண் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடித்து அகற்றப்பட்டது. இது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசின் நடவடிக்கையை எதிர்த்து பல்கலைக்கழக வாயிலில் கூடிய பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகள் நேற்று இரவு முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். இரவில் இருந்து போராட்டம் தொடர்ந்து வருகிறது., தற்போது வரை அப்போராட்டம் கைவிடப்படாமல் நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், அப்பகுதியை சுற்றி ஆயுதம் தாங்கிய அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டது குறித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராஜா விளக்கத்தில், “யாழ் பல்கலைக்கழகம் என்பது அரசாங்கத்தினுடைய சொத்து.
எனவே அரசாங்கத்தினுடைய உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டியது துணைவேந்தர் ஆகிய எனது கடமை. அதன் அடிப்படையிலேயே நான் இந்த தூபியினை இடித்து அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் குறித்த தூபி அமைப்பதற்கு அனுமதி எதுவும் பெறப்படவில்லை.
மேலும், ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் எந்த பொதுமக்களும் இறக்கவில்லை என்பதால், நினைவுச் சின்னம் தேவையில்லை. தனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தின் அடிப்படையில் அனுமதி இல்லாத கட்டடங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த அறிவித்தலின் அடிப்படையிலேயே நான் அதனை அகற்றியிருந்தேன். இதனை அகற்றத் தவறி இருந்தால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் காணப்படும் ஏனைய பொங்குதமிழ் தூபி மற்றும் மாவீரர் நினைவாலயம் என்பனவும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திடீர் மாயம்