சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “சர்கார்”. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (02. 10.2018) மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், படக்குழுவினர் கலாந்திமாறன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலட்சுமி சரத்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான் என்று பலரும் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய், “ஆளப்போறான் தமிழன் தமிழர்களின் அடையாளம், ஒரு விரல் புரட்சி ஒட்டு மொத்த மக்களின் அடையாளம். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு கிடைத்தது, சர்காருக்கே ஆஸ்கர் கிடைத்தது போல உள்ளது.
நாங்கள் சேரும் போதெல்லாம் வெற்றி படங்கள் கொடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். மெர்சல் படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் அரசியல்ல மெர்சல் பண்ணியிருக்கார்.
சினிமாவுக்கு வந்த கொஞ்ச நாளில், கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிப்பதாக சொன்னார்கள். சூப்பர், வர்றலட்சுமிய வேணாம்ணு சொல்லக் கூடாது பாருங்க. யோகி பாபுவின் அசுர வளர்ச்சியை பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.
எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி என பல்வேறு முகங்களை கொண்ட பழ.கருப்பையா ஐயாவுடன் நடித்ததை கவுரமாக நினைக்கிறேன். பேரில் மட்டுமில்லாமல், நடிப்பிலும் அப்பா பெயரை எடுத்த எம்.ஆர்.ராதாரவி சார். நாளை தீர்ப்பு படத்தில் அவருடன் எனது பயணம் தொடங்கியது. மேலும் அனைத்து படக்குழுவினருக்கும் நன்றி.
வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். ஆனால் வெற்றியடைந்து விடக்கூடாது என்பதற்காக ஒருகூட்டம் உழைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கு மட்டும் இல்லை, உங்கள் அனைவரது வாழ்க்கையிலும் இருப்பது தான், அது இயற்கையானது தான். அதை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ஒன்று, வாழ்க்கை என்னும் விளையாட்டை பார்த்து விளையாடுங்கள் நண்பா.
இது யார் சொன்ன வரிகள் என்று தெரியவில்லை. ஆனால் நான் இதை பின்பற்றி வருகிறேன். அது என்னவென்றால், உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும் இருந்துட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். இதை பின்பற்றி பாருங்கள் உண்மையாகவே ஜம்முன்னு தான் இருக்கிறது.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சர்காரை அமைப்பார்கள். ஆனால் நாங்கள் சர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம். படத்தை சொன்னேன், பிடித்திருந்தால் படத்திற்கு ஓட்டு போடுங்கள்.
சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். ஆனால் அதை ஒழிப்பது என்பது எளிதான விஷயமாக எனக்கு தெரியவில்லை. நாம் அன்றாட வாழ்வில் நாம் பழகிபோய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த அளவுக்கு ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை. வேறு வழியில்லை ஒழித்து தான் ஆக வேண்டும் என்று குட்டிக்கதை ஒன்றையும் கூறினார்.
ஒரு மாநிலத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் சரியாக இருந்தால், மற்றவர்களுக்கெல்லாம் ஒரு பயம் வரும். ஒரு தலைவன் சரியாக நடந்தால், அவன் வழியில் அவன் கட்சியும் நல்ல கட்சியாக இருக்கும். வாழ்க்கையில் அடிப்பட்டு கீழே இருந்து ஒருவன் மேலே வருவான், அவன் தலைமையில் ஒரு சர்கார் நடக்கும். ஆனால் ஒன்று, தர்மம் தான் ஜெயிக்கும், நியாயம் தான் ஜெயிக்கும், ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும்” என்று படத்தில் வருவது போல அரசியல் பேசினார் விஜய்.
இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “விஜய்யுடன் நான் இணைந்த மூன்றாவது படம் சர்கார். என்னுடைய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள். படத்தில் விஜய் சார் அவரது நிஜ வாழ்க்கையில் இருப்பது போல் நடித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவரது திறமை வளர்ந்து கொண்டே போகிறது.
அவர் மனதில் ஒன்று தோன்றினால் அதை உடனடியாக செய்துவிடுவார். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு தடைபட்ட உடனே, திடீரென கிளம்பி தூத்துக்குடி சென்றுவிட்டார். அதுதான் உங்களுக்கே தெரியுமே. விஜய் சார் எனக்கு கிடைத்த ஆயுதம். அவரை ஒரு பீரங்கியாக பயன்படுத்தியிருக்கிறேன்” என்றார்.
இதில் காமெடி நடிகர் யோகி பாபு பேசும் போது, “மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் அண்ணாவுடன் நடித்திருக்கிறேன். மெர்சல் படத்தின் போது ஒரு வசனம் ஒன்று வரும். அப்போது அண்ணா சொன்னார், நீ ஏன் உன்னை இறக்கிக்கிற, தைரியமா சொல்லு, இது தொழில் தான் என்றார். நான் நிறைய நடிகர்களுடன் நடித்து வருகிறேன். தற்போது அஜித் சார், விஜய் அண்ணா என பல முன்னணி நாயகர்கள் மற்றும் நாயகிகளுடன் நடிக்கிறேன். அதில், அண்ணன் விஜய் வேற லெவல்” என்றார்.
விழாவில் பேசிய ராதாரவி, “தற்போது சர்கார் சும்மாதான் நடந்துகிட்டு இருக்கு. தளபதி விஜய் சமுதாயத்திற்கு தேவை. நான் சொன்னதுக்கே இப்படி கைதட்டல் என்றால், விஜய் சமுதாயத்தில் இறங்கி வேலை செய்தால் எவ்வளவு கைதட்டல் கேட்கும்” எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் போது தமிழ் இசைக்கான ஏ.ஆர்.ரஹ்மான் ஃபவுண்டேசன் ஒன்றை ஷோபா சந்திரசேகர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த பவுண்டேசன் மூலம் 3000 ஆண்டுகள் பழமையான தமிழ் இசை பற்றி ஆராய்ச்சி ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படம், வரும் தீபாவளியன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் பேச்சுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், ‘சினிமா தொழிலை ஒழுங்காக பாருங்கள். திருவிழாவுக்கு வருவோரெல்லாம், சாமியாக முடியாது. கடவுள் கொடுத்த சினிமா தொழிலை முதலில் ஒழுங்காக பாருங்கள்” எனக் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.