மெக்ஸிகோவில் பெட்ரோலை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்ல குழாய்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், அத்தகைய குழாய்களில் துளையிட்டு பெட்ரோல் திருடி விற்பனை செய்வதை பலர் தொழிலாகவே செய்து வருகின்றனர். குறிப்பாக, போதை மருந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து மெக்ஸிகோ அதிபராகப் பெறுப்பேற்றுள்ள ஆண்ட்ரஸ் மனுவெல் ஒப்ராடோர், பெட்ரோல் திருட்டைத் தடுக்கும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் குழாய் மூலம் பெட்ரோல் எடுத்துச் செல்வது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக, பெரும்பாலான இடங்களில் எரிபொருள் பற்றாக்குறை
ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளானதால் அந்த நடவடிக்கை சர்ச்சைக்குள்ளானது.
டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்டாலும், அது மக்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை.
குழாய்களில் பெட்ரோல் திருடப்படுவது மெக்ஸிகோவின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாகக் கருதப்படும் நிலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிகோவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள லஹூலில்பன் நகரில், பெட்ரோல் கொண்டு செல்லும் குழாயில் வெள்ளிக்கிழமை இரவு வெடி விபத்து ஏற்பட்டது.
குழாயில் சட்டவிரோதமாக துளையிட்டு பெட்ரோல் திருடப்பட்டபோது, அந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெடி விபத்து காரணமாக அங்கு பெட்ரோல் சேகரித்துக் கொண்டிருந்த 79 பேர் உடல் சிதறியும், கருகியும் உயிரிழந்தனர்; 76 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், தற்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது மனுவெல் ஒப்ராடோர் அரசுக்கு சிக்கலை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.