சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் ஆகியோர் இணையும் மெகா கூட்டணி படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0, நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படங்களை தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதனிடையே, அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் SK17 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன் முறையாக நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
மிகுந்த பொருட் செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் ஜூலை மாதம் தொடங்கவிருப்பதகாவும், 2020-ல் திரைப்படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் அடுத்த இரண்டு படங்களை இயக்குனர்கள் ரவிகுமார் மற்றும் பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இணையும் இன்னொரு படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.