2021, ஜனவரி 27 ஆம் தேதியுடன் தண்டனை காலம் முடியும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சிறை நிர்வாகத்திடம் சசிகலா விண்ணப்பம் செய்து உள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி 14 ஆம் தேதி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது உச்சநீதிமன்றம்.
கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா உள்பட மூவரும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கர்நாடக சிறை விதிகளின்படி, சிறை கைதிகள் நன்னடத்தையின் அடிப்படையில் அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும்.
அதன்படி சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார். 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை காலம் குறைக்கப்படும்.
சசிகலா உள்பட மூவரின் தண்டனை காலம் ஜனவரி 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா பரப்பன அக்ரஹார மத்திய சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்து உள்ளார்.
பரப்பனா அக்ரஹாரா மத்திய சிறை அதிகாரிகள் சசிகலா விண்ணப்பத்தை சிறைத்துறைக்கு அனுப்பியுள்ளனர். முன்னதாக சசிகலா தரப்பில் கடந்த மாதம் அபராதத் தொகையான ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.