சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி் வரும் ‘தர்பார்’ திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று தேர்தலை முன்னிட்டு தனது வாக்கை பதிவு செய்ய மும்பையில் இருந்து சென்னை வந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் அவர் மும்பை செல்லவிருப்பதை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய ரஜினிகாந்த், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்க்கொள்ள தயாராக உள்ளோம் என்றும், நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது, அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் கூறினார்.
மேலும் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா? என்ற கேள்விக்கு, இந்த கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும் என்று கூறினார்.
தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறை குறித்த கேள்விக்கு, முன்னர் தேர்தலின் போது நடந்த வன்முறைகளை விட தற்போது குறைவு தான் அதனால் இந்த முறை சிறப்பாக தான் தேர்தல் நடந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, நேற்று ரஜினி வாக்களித்த போது அவரின் வலது ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தேர்தலின் போது வைக்கப்படும் மை இடது ஆள் காட்டி விரலில் தான் வைக்க வேண்டும், இடது ஆள் காட்டி விரலில் மை வைப்பதில் ஏதேனும் பிரச்னை இருப்பின், மற்ற விரல்களில் வைக்கலாம் என்ற தேர்தல் விதிமுறை இருக்கும் போது, ரஜினிக்கு ஏன் வலது கை விரலில் வைக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரபலம் என்பதால் ரஜினியை பார்த்ததும் பதற்றத்தில் அவர் வலது கை விரலில் மை வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் பல முறை வாக்களித்துள்ள ரஜினி ஏன் தன் வலது கையை நீட்டினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.