தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு எதிராக, தனியார் நிறுவனம் சார்பில் வழக்கு தொடர்ந்த ஜெரார்டு கிஷோர் என்பவரை தற்போது அந்த வழக்கை விசாரிக்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினராக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் (Tamil Nadu Electricity Board- TNEB) கடந்த 10 ஆண்டுகளாக மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தனியார் மின்சார நிறுவனங்களுக்கும் இடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைப்பது,

தனியார் நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வரவேண்டிய நிலுவைத் தொகை மற்றும் நஷ்டஈடு உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்வு காண்பது, மின் நுகர்வோருக்கான மின்சார கட்டணத்தை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது சிவில் நீதிமன்றமாக செயல்படுகிறது. இது அரசின் தலையீடு இன்றி தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு என்று மின்சார சட்டம் 2003-ல் கூறப்பட்டுள்ளது. மின்சார சட்டம் 2003-ன் (Electricity Act 2003) படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் என மூன்று பேர் நியமிக்கப்படுவர்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உயர்நீதிமன்ற நீதிபதியால் நியமனம் செய்துவைக்கப்படுவர். இவர்கள் தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள பிரச்சினைகளை ஒரு நீதிமன்றமாக இருந்து தீர்த்து வைப்பார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கடந்த 25.12.2020 அன்று முதல் காலியாக இருந்த உறுப்பினர் பதவிக்கு கடந்த டிசம்பர் 2021ல் அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதனையடுத்து 11.1.2022 அன்று ஜெரார்டு கிஷோர் என்பவர் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். மின்சார சட்டம் 2003-ன் படி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் ஒன்றிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஆகிய 3 பேர் அடங்கிய தேர்வுக் குழு, 2 நபர்களை தேர்வு செய்து அரசிற்கு அனுப்பி, அதில் இருந்து ஜெரார்டு கிஷோர் உறுப்பினராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தற்போது உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஜெரார்டு கிஷோர் மின்சார சட்டம் 2003-ன் விதிகளை மீறி, நேர்மையற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ளதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் கூறுகையில், “தமிழ்நாடு மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மின்சார சட்டம் 2003 இன் படி உறுப்பினர் நியமிக்கப்படுவார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவு 85 (5) இன் கீழ் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுபவர் எந்தவிதமான Conflict Interest or financial interest இருக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது.

ஆனால் கடந்த ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெரார்டு கிஷோர் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக இண்ட் பாரத் பவர் இன்ஃப்ரா லிமிடெட் (IND-BARATH POWER INFRA LIMITED- IBPIL) மற்றும் அதன் பல்வேறு நிறுவனங்களான ஆர்கே எனர்ஜி ராமேஸ்வரம் லிமிடெட் (Arkay Energy Rameswarm Limited- AERL) உட்பட அதன் சார்ந்த நிறுவனங்களில் வணிக மற்றும் சட்ட பிரிவின் தலைவராக பணிபுரிந்துள்ளார்.

இந்த IBPIL நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் பல ஆண்டுகளாக மின்சாரம் கொள்முதல் செய்துள்ளது. இதில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், IBPIL மற்றும் அதன் சார்பு நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் மற்றும் வழக்குகள் உள்ளன.

இதில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு எதிராக, IBPIL மற்றும் அதன் பல்வேறு நிறுவனங்கள் சார்பாக வணிக மற்றும் சட்ட பிரிவின் தலைவராக இருந்த ஜெரார்டு கிஷோர் தான் கையெழுத்திட்டு Affidavit தாக்கல் செய்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வழக்கை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.

இந்த ஜெரார்டு கிஷோர் தற்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு எதிராக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது தொடுத்த வழக்குகளை, தற்போது அவரே விசாரிப்பார். இது மின்சார சட்டம் 2003 பிரிவு 85(5)க்கு முற்றிலும் எதிரானது.

மேலும் இதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், ஜெரார்டு கிஷோர் கடந்த 10 ஆண்டுகளாக IBPIL நிறுவனத்தில் பணிபுரிந்த போது, 12000 கோடி தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் நஷ்டஈடு கேட்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் IBPIL மற்றும் அதன் AERL உள்பட 2 நிறுவனங்கள் சார்பாக வழக்குகள் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி, ஒரு நிறுவனம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்தால், அதில் 1% கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில் IBPIL, AERL மற்றும் அதன் நிறுவனம் சார்பாக 12000 கோடி நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தால் அதில் 1% அதாவது 12 கோடி கட்டணமாக செலுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் அப்போது வணிக மற்றும் சட்டப் பிரிவின் தலைவராக இருந்த ஜெரார்டு கிஷோர், அந்த வழக்குகளை miscellaneous வழக்காக தொடுத்ததால் வெறும் 30000 ரூபாய் மற்றும் கட்டணம் செலுத்தி, 12 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தி உள்ளார்.

இந்த மோசடியை 2019 ஆண்டு அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வந்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளது. தற்போது வரை அந்த வழக்குகள் லஞ்ச ஒழிப்பு துறையில் நடைபெற்று வருகிறது. இதனை அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்தவுடன் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அந்த நிறுவங்கள் சார்பாக போடப்பட்ட 3 வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.

மேலும் IBPIL மற்றும் அதன் மற்ற நிறுவனங்கள் கிட்டத்தட்ட 942 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளதாக சிபிஐ இந்த நிறுவனம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் அமைப்பதாக கூறி வங்கியிடமிருந்து 942 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.

ஆனால் தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் அமைக்காமல், அந்த தொகையை வங்கியில் நிலையான வைப்பு நிதியாக வைத்து, அதன் மூலம் மேலும் கடன் பெற்று பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற மோசடி புகார்கள் எழும்போது IBPIL நிறுவனத்தில் சட்டம் மற்றும் வணிகப் பிரிவு தலைவராக பணிபுரிந்த ஜெரார்டு கிஷோர், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு எதிராக இவர் தொடர்ந்த வழக்குகளை தற்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராகி இவரே நீதி வழங்கும் இடத்தில் அமர்ந்து விசாரித்து தீர்ப்பு வழங்குகிறார்.

ஒரு நிறுவனம்/ அமைப்பு தன்னிச்சையாக செயல்பட்டால் தான் அரசாங்கம் நல்லபடியாக நடக்கும். அதேபோல் மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் தன்னிச்சையாக செயல்பட்டால்தான் தமிழ்நாடு மின்சாரத் துறையில் உள்ள கடனிலிருந்து ஓரளவாவது மீள முடியும்

ஆனால் இதுபோன்று விதிகளை மீறி அப்பதவிக்கு தகுதியற்ற ஒருவரை நியமனம் செய்வது பல்வேறு மோசடிகளுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே உச்ச நீதிமன்றமும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நியமனம் நியாயமாக நடைபெற வேண்டும் என்று பல வழக்குகளில் கூறியுள்ளது.

எனவே இதுபோல் அப்பட்டமாக சட்ட விதிமுறைகளுக்கு முரணான ஒரு நபரை முன்னாள் நீதிபதி சிடி செல்வம் அவர்களும், தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் தமிழ்நாடு அரசும் நியமித்துள்ளதற்கு யார் காரணம் என்பது தெரிய வேண்டும்.

இதுபோன்ற ஆணையங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்பதே சட்டம். தமிழ்நாடு முதல்வரும் இது மக்களுடைய ஆட்சி. இது வெளிப்படை வெளிப்படையான ஆட்சி என்று கூறுகிறார். அதற்கு ஏற்ப இதுபோன்ற ஆணையங்களின் தலைவரும், உறுப்பினர்களும் நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து இன்று (4.2.2022) ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் சார்பில் முதலமைச்சர் பிரிவிற்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக பல வேலைகள் நடந்து உள்ளது. இதன் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் உள்ளது என்றும் கூறப்படுவதால், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுக்கிறது.

மேலும் இந்தப் பதவிக்கு யாரெல்லாம் போட்டியிட்டார்கள். எந்த இரண்டு பேரை தேர்வுக் குழு தேர்வு செய்தது, ஏன் நேர்மையான ஒரு நபரைக் கூட தமிழ்நாடு அரசால் தேர்வு செய்ய முடியவில்லை என்று பல்வேறு கோரிக்கைகளை அறப்போர் இயக்கம் முன்வைக்கிறது.

எனவே சட்டத்திற்கு முரணாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஜெரார்டு கிஷோரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அந்த உறுப்பினர் பதவிக்கு தகுதி உள்ள நேர்மையான ஒருவரை தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும்.

அதுபோல் நேர்மையான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டங்கள் பாதியாக குறையும்” என்று அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.