மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மரப்பாதையை விரைவில் நிரந்தரப் பாதையாக மாற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மெரினாவில் தன் துன்பத்தை மறந்து குளிர்ந்த காற்று, மணல் மற்றும் கடலின் அலைகளை உணருவது புத்துணர்ச்சியளிப்பதாக கூறுவோம். ஆனால் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அந்த வசதி அமையும் வண்ணம் இல்லாமல் இருந்தது வருத்தமளித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு முன்னிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக கடல் அலைகளை கண்டு ரசிக்கும் படி பிரத்யேகமாக மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மரப்பாதையை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு வந்தது. சக்கர நாற்காலியில் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட இந்தப் பாதை ஜனவரி 3 ஆம் தேதி வரை புழக்கத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜனவரி 16 ஆம் தேதி வரை நீட்டிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிப் பாதையினை விரைவில் நிரந்தரம் ஆக்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பதிவில், “எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம். சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட.” எனத் தெரிவித்துள்ளார்.