தடுப்பூசி விற்பனை இந்திய அரசுடன் மட்டும் தான் மேற்கொள்வோம், மாநில அரசுகளுடன் நேரடி வர்த்தகம் செய்ய முடியாது என்று மாடர்னா மற்றும் பைசர் மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கத்தால் தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், தினசரி 4 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழப்புகள் பதிவாகி வருவதால் சடலங்களை எரிக்க அவர்களது உறவினர்கள் வரிசையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஒரே ஆயுதமாக தடுப்பூசிகள் உள்ளன. கொரோனா முதல் அலையின் போதே இந்திய மக்களின் தேவைக்கு ஏற்ப மோடி தலைமையிலான பாஜக அரசு தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யாததால் தற்போது இந்தியா முழுவதும் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 18 வயது முதல் 44 வயதுள்ளவர்களுக்கான தடுப்பூசிகளை அந்தந்த மாநில அரசுகள் வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் தடுப்பூசிகளுக்கான செலவுகளை மாநில அரசுகள் மீது மறைமுகமாகச் சுமத்தி வேடிக்கை பார்த்து வருகிறது மோடி அரசு.
இருப்பினும், மக்களை பாதுகாக்கும் பொருட்டு பல மாநில அரசுகளும் சர்வதேச டெண்டர் மூலம் வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசிகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் மார்டனா மற்றும் பைசர் நிறுவனத்திடம் தடுப்பூசிகளை வாங்க கோரியிருந்தனர்.
இந்நிலையில் மார்டனா மற்றும் பைசர் நிறுவனங்கள், தடுப்பூசி விற்பனையை இந்திய அரசுடன் மட்டும் தான் மேற்கொள்வோம், மாநில அரசுகளுடன் நேரடி வர்த்தகம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளன. இதனால் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி இன்னும் காலதாமதமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே மத்திய அரசு தடுப்பூசிகள் கொள்முதல் செய்வதில் விரைந்து செயல்பட வேண்டும் என்றும், அப்போது தான் மூன்றாவது கொரோனா அலையிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில், “அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா மருந்து நிறுவனங்களுடன் பேசி நேரடியாக தடுப்பூசி விற்பனை செய்யக் கோரினோம். ஆனால், அந்த நிறுவனங்கள் மத்திய அரசுடன் மட்டுமே நேரடியாகப் பேசி தடுப்பூசி விற்போம், மாநில அரசுகளுக்கு விற்க முடியாது எனத் தெரிவித்துவிட்டன.
நான் மத்திய அரசிடம் மக்களுக்காக இரு கரம் கூப்பி கேட்கிறேன். அந்த மருந்து நிறுவனங்களிடம் பேசி, தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், மாநிலங்களுக்கு வழங்கவும் உதவ வேண்டும்” எனத் தெரிவித்தார்
அதேபோல் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, அமெரிக்காவில் உள்ள மாடர்னா நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசியை வாங்க கோரியிருந்த நிலையில் அந்த நிறுவனம் தடுப்பூசி சப்ளை செய்ய மறுத்துவிட்டது.
இதுகுறித்து பஞ்சாப் அரசின் தடுப்பூசிக் கொள்முதலுக்கான அதிகாரி விகாஸ் கார்க் வெளியிட்ட அறிக்கையில், “ஸ்புட்னிக் வி, பைசர், மாடர்னா, ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் ஆகிய மருந்து நிறுவனங்களிடம் நேரடியாக தடுப்பூசிக் கொள்முதல் செய்ய முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவுப்படி அணுகினோம். இதற்காக சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் வெளியிட்டு தடுப்பூசிக் கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், மாடர்னா மருந்து நிறுவனம் எங்களுக்கு அனுப்பிய பதிலில் தடுப்பூசி விற்பனையை இந்திய அரசுடன் மட்டும் தான் வைத்துக்கொள்வோம். எங்கள் நிறுவனத்தின் கொள்கையின்படி, மாநில அரசுகளுடனும், எந்த தனியார் அமைப்புகளுடனும் தடுப்பூசி விற்பனையை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது” என கூறியுள்ளார்.
கருப்பு, வெள்ளையை விட ஆபத்தான மஞ்சள் பூஞ்சை தொற்று- எச்சரிக்கும் மருத்துவர்கள்