மறக்க முடியுமா கலைஞரை.. என்ற தலைப்பில் திரையுலகினர் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி மற்றும் கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், பிரகாஷ்ராஜ், ராதாரவி, தெல்ங்கு நடிகர் மோகன்பாபு, ராதிகா சரத்குமார், பார்த்திபன், பிரபு, இயக்குனர் பாரதிராஜா, நடிகர் மயில்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, மனித மலத்தை மனிதனே அல்லும் அவல நிலையைக் கண்டு கொதித்து, அருந்ததியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அளித்தார். வட மாநிலத்தில் சில அமைப்புகள் அம்பேத்கர் பெயரே இந்தியாவில் இருக்கக் கூடாது என முழக்கமிட்டபோது அதை எதிர்த்து அம்பேத்கருக்கு சிலை வைத்தார், என கலைஞரின் சாதனைகளை பட்டியலிட்டார்.
இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், பகுத்தறிவு பகலவன் மறைந்து விட்டது. அரசியல், கலைத்துறை, இலக்கியம் சார்ந்த துறைகளை சார்ந்தவர்கள் நொடிந்து போய்யுள்ளனர். இந்த சூரியன் மீண்டும் உதிக்கும் என நம்பிக்கை இருக்கிறது என ஸ்டாலினை சுட்டிக்காட்டி பேசினார். தமிழும், கலைஞரும் இரண்டரை கலந்த அடையாளம். தமிழ் திரைப்பட வரையறைகளை உடைத்தெரிந்து வந்திருக்கிறாய் என கலைஞர் பாராட்டியது மறக்க முடியாதது. மனிதாபிமான சிறந்த மனிதர் கலைஞர். அரசியலில் வித்தகர் இருப்பினும், கலைஞரை தவிர்த்து விட்டு தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடியது ஏன் என கலைஞர்கள் ஏன் கேட்கவில்லை என்றார்.
நடிகர் சத்யராஜ், தமிழர்களை எங்கும் விட்டுக்கொடுக்காதவர். அவருடைய வசனத்தை பேசாமல் சினிமாவில் யாராலும் வசனம் பேச முடியாது. பெரியார் பாதையில் இருந்து விலக கூடாது என்பதற்காக எனக்கு மோதிரம் போட்டவர், பெரியாரின் உண்மையான சீடர் கலைஞர். சாதியின் அடிப்படையில், பிறப்பின் அடிப்படையில் தமிழகத்தில் இருந்த பிரிவினைக்கு எதிராக இருக்கும் சுயமரியாதை, பகுத்தறிவு, ஆகியவற்றிக்கு எதிராக உள்ளவர்களை கலைஞரின் கொள்கைகள் அச்சுறுத்தி கொண்டே இருக்கும்.
நடிகர் ராஜேஷ் கூறுகையில், 1969ல் அறிஞர் அண்ணா உயிரிழந்தபோது கட்சி நிலைக்காது என்பதை மாற்றியமைத்தார். எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகியோரின் பல எதிர்ப்புகளை முறியடித்தவர். கலைஞர் சிறந்த முதல்வராக இருப்பார் என எம்.ஜி.ஆர். நம்பினார். அறிஞர் அண்ணா உயிரிழந்த பிறகு முதல்வர் யார் என்பதற்கு கலைஞர் கருணாநிதி என எம்.ஜி.ஆர். ஆதரவு அளித்தார். மாற்று கட்சியினிரடமும் நல்ல பெயரை பெற்றவர் கலைஞர்.
நடிகர் பார்த்திபன் பேசும்போது, சூரிய வணக்கம் என சொல்லி பேச ஆரம்பித்தார். சூரியன் மறைந்த பிறகு என்னை பேச அழைத்துள்ளீர்கள் என்ன பேசுவதென சொல்லிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார். தமிழ் உயிர்போன்றது.. கலைஞர் மறைந்த பிறகு தமிழுக்கு உயிர்போனது என உருக்கமாக பேசினார். கலைஞருக்கும் பார்த்திபனுக்கும் இடையேயான பழக்கத்தை குறிப்பிட்டார்.
பேச்சின் நடுவே ஸ்டாலினுக்கு டானிக் கொடுக்கப் போகிறேன் எனக் கூறி அவரை மேடைக்கு அழைத்த பார்த்திபன், கலைஞரின் அடையாளமான மஞ்சள் துண்டை போர்த்தி கௌரவித்தார். அதிகமாக பேசுவதை விட இதுதான் சரி எனக் கூறினார்.
நடிகர் மோகன் பாபு பேசும்போது, கலைஞர் சிறந்த மனிதர். தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். கலைஞர் ஆட்சியில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக இருந்தது. தமிழின் பாதுகாவலர் கலைஞர். அவருடைய வாழ்க்கை பரிமாணங்கள் நமக்கு வரலாறு. பராசக்தி, மலைக்கள்ளன், மனோகரா போன்ற படங்கள் வரலாற்று படங்கள். அவருடைய வசனத்தில் நடிக்க எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றார்.
நடிகை ராதிகா சரத்குமார், விரைவில் திமுகவிற்கு தலைவராகவுள்ள ஸ்டாலினுக்கு வணக்கம். கலைஞர் இல்லாத அரசியல், அறிவாலயம், கலை உலகம், தமிழகம், கோபாலபுரம்,கழகம் அனாதையாக உள்ளது என்றார்.
நடிகர் பிரபு பேசியபோது, நடிகர் சிவாஜி கணேசன் சிலை நிறுவுவதற்கு காரணம் எனது பெரியப்பா கலைஞர். அந்த சிலை தொடர்ந்து இருப்பதை வருங்காலத்தில் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஸ்டாலினை குறிப்பிட்டு பேசினார். தமிழினம், தமிழ் உணர்வு இருக்கும் வரை கலைஞரை மறக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.
இதில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், கலைஞரை பிரதிபலிக்ககூடிய கதாப்பாத்திரத்தில் நடிக்க மணிரத்தினத்தின் இருவர் படம் வாய்ப்பு வந்தது. சவாலான பாத்திரம். தமிழ் உணர்வு, சுயமரியாதை, உரிமை, பண்பாடு ஆகியவை கலைஞர் மூலம் உணர்ந்து கொண்டேன். சிவாஜி இல்லை இப்போது பிரகாஷ்ராஜ் உள்ளார் என கலைஞர் கூறும்போது பல விருதுகள் கிடைத்த மகிழ்ச்சியை அடைந்தேன். தேசிய பொறியியல் நுழைவுத்தேர்வை தமிழகத்தில் தடுத்தவர் கலைஞர். ஆனால் தேசிய நுழைவுத்தேர்வுத் தீண்டாமையை மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ளது என்றார்.
நடிகர் மயில்சாமி பேசியபோது, எப்போதுமே பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர சகோதரிகளே… என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என ஆரம்பிப்பார். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் மிமிக்கிரி செய்யும்போது பார்வையாளர்கள் சத்தம் போட ஆரம்பித்துவிட்டனர். அப்போது அருகில் இருப்பவர், ‘என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே’ என்பதை விட்டுட்டீர்கள் எனச் சொன்னார். அதை சேர்த்து சொன்னவுடன் கைதட்டல் காதை கிழித்தது எனக் கூறினார்.
இறுதியாக பேசிய நடிகர் சிவகுமார், பராசக்தி வசனம் பேசி அசத்தினர். தமிழ் சினிமாவின் அடையாளத்தை பராசக்தி திரைப்படம் மூலம் மாற்றி அமைத்தவர் கலைஞர். தனது கொள்கைகளை சாமர்த்தியமாக உலகத்திற்கு திரைப்பட வசனங்கள் மூலம் கொண்டு சென்றவர் கலைஞர்.அரசியல், கலை, இலக்கியத்தில் அவருடைய இடத்தை யாராலும் அசைக்க முடியாது என்று குறிப்பிட்டார்.