வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளியின் மகள் அரசு பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தகுதி பெற்று தமிழ்நாடு அரசின் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வித்யா. இருவரும் கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகள் சந்தியா, மாற்றுத்திறனாளியான இவர் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
குடும்ப வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாணவி சந்தியாவின் பெற்றோரைச் சந்தித்து பேசினர். மாணவியின் பள்ளி படிப்பு செலவை தாங்களே ஏற்றுக்கொள்வதாக கூறி சத்யாவை மேற்கொண்டு படிக்க வைக்க சம்மதம் பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவி 600-க்கு 532 மதிப்பெண்கள் பெற்றார். மேலும் நீட் தேர்வில் பங்கேற்று 720-க்கு119 மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்றார்.
.அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளில் சீட் வழங்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த வியாழனன்று தொடங்கியது.
இதில் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் பங்கேற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் நடந்தது. இதில், அரசு பள்ளி மாணவி சந்தியாவுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கான சீட் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த முதல் மாணவியாக மாற்றுத்திறனாளி பிரிவை சேர்ந்த சந்தியா விளங்குகிறார். இந்நிலையில் குடும்ப வன்முறைக் காரணமாக அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை செலுத்தவும் வழியில்லாமல் சந்தியா தவித்து வந்ததாகக் கூறப்பட்டுகிறது.
இதனையடுத்து மாணவின் நிலையை அறிந்த வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு எம்எல்ஏ.வுமான நந்தகுமார், மாணவி சத்யா மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து, மருத்துவப் படிப்பு காலமான 5 ஆண்டுக்கான கல்விக் கட்டணம் மற்றும் படிப்பு செலவை தான் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்து, இந்த ஆண்டுக்கான படிப்பு செலவுக்கு ரூ.1.5 லட்சத்தை தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.