2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தில்லியில் ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக் கட்சிகள், 51 மாநிலக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், சாமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடைபெறுவதாகவும், விவிபிஏடி இயந்திரத்தில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் தொடர்பாகவும் கவலை தெரிவித்தன. மேலும், இவர்கள், வாக்குப்பதிவுச் சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறிய கருத்து விவரம் வருமாறு ” மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நேர்மைத்தன்மை தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இதனால், அடுத்த தேர்தலில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையைக் கைவிட்டு, வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைக்கு சுமார் 70 சதவீதமான கட்சிகள், ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், குறைந்தது 30 சதவீதமான வாக்குச் சீட்டு மையங்களில், பேப்பர் ட்ரெயில்(வாக்குப்பதிவு சரிபாா்ப்பு சீட்டு முறை) முறையை கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
மேலும், வேட்பாளர்கள் குறிப்பிட்ட அளவு பணத்தையே செலவு செய்யலாம் என்ற வரையறை உண்டு. ஆனால், கட்சி செலவு செய்வது தொடர்பாக எவ்வித வரையறையும் இல்லை. இது ஆபத்தானது. தேர்தலில் கட்சிகள் செலவு செய்யும் பணத்திற்கு வரையறை விதிக்கப்பட வேண்டும்.
மேலும், அடுத்து தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் சுமார் 60 லட்சம் போலி வாக்காளர்களும், ராஜஸ்தானில் சுமார் 45 லட்சம் போலி வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அவர்.
ஆம் ஆத்மி சார்பில் தேர்தல் ஆணையக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தா கருத்து விவரம் வருமாறு” மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெறுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் பாஜக மட்டுமே பயனடைகிறது. குறைந்தது 20 சதவீதமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தணிக்கை செய்து அந்த இயந்திரங்களின் நேர்மைத் தன்மையை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார் அவர்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பேனர்ஜி கருத்து விவரம் வருமாறு” மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. இதில் மிகப் பெரிய மோசடி நடைபெறுகிறது. வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்புவதே நேர்மையான தேர்தலை உறுதிப்படுத்தும்” என்றார் அவர்.
தமிழ்நாட்டிலும் 2014 தேர்தலில் 63 லட்சம் போலி வாக்காளர்களும், 2016 தேர்தலில் 40 லட்சம் போலி வாக்களர்களுடன் தேர்தல் நடைபெற்றதை தேர்தல் ஆணையம் ஒத்து கொண்டதும் ., மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லுகள் நடைபெற்றதாக எதிர்கட்சிகள் கூறியதும் குறிப்பிடதக்கது