குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் விவரத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தமிழக பொதுப்பணித்துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி அருண்நிதி என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் அளித்த மனுவில் நீர்நிலைகள், எல்லைகள், அவற்றின் வழித்தடம் உள்ளிட்ட விவரத்தை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் நீரை தேக்கிவைக்க முடியவில்லை எனவும் மனுதாரர் தரப்பு வாதமிட்டது. மேலும் பல கண்மாய்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது எனவும் இதனால் நீர்நிலை அளவுகளில் மாறுபாடு ஏற்படுவதாகவும் வாதமிட்டார்.
இந்த விவகாரத்தில் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் விவரத்தை பொதுப்பணித்துறை மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாக இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.