மதுரையில் அமைய உள்ள ‘எய்ம்ஸ்’ திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,264 கோடி என்று மத்திய அரசு குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், 2,000 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 199.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு நான்கு ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறவுள்ள நிலையில், இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை. இது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.1,264 கோடி மதிப்பில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவித்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாகியும் ஒரு செங்கலை கூட வைக்காத நிலையில், தற்போது மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு 2,000 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி மூலம் தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எய்ம்ஸ் நிலம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, தோப்பூரில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடு 2,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும், அதற்கான 85 % கடனை ஜப்பான் நாட்டு ஜிக்கா நிறுவனம் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தன் வருகிற மார்ச் மாதம் கையெழுத்தாகும் என தெரிவித்துள்ள மத்திய அரசு எஞ்சியுள்ள 15% நிதி எப்படி பெறப்படும் என்பதை தெரிவிக்கவில்லை. மேலும், எய்ம்ஸ் கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு கல்லூரி வகுப்புகளுக்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு இன்னும் மாநில அரசு நிலத்தை ஒப்படைக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்த நிலையில், தற்போது தெரிவித்துள்ள தகவலில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 222.47 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு தந்துள்ளது. நில ஒப்படைப்பு சான்றிதழை கடந்த நவம்பர் 3 ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அனுப்பி இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட போது 1264 கோடி ரூபாயாக இருந்த திட்ட மதிப்பீடு தற்போது 2000 கோடியாக அதிகரித்துள்ளது மற்றும் மத்திய மாநில அரசுகள் எய்ம்ஸ் விவகாரத்தில் இழுத்தடிப்பு செய்வது கொள்ளையடிப்பதற்கான பேரம் நடைபெறுகிறதா என அரசியல் நோக்கர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பங்குச்சந்தை முறைகேடு; முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்