மதுபான கொள்கை முறைகேட்டில் டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அங்கு துணை முதல்வராக மணிஷ் சிசோடியாக உள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது.
புதிய கொள்கையின் அடிப்படையில் 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து, புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. மேலும் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்பட பலரது வீடுகளில் சோதனை செய்தனர்.
மேலும் விஜய் நாயர், 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படை யில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த குற்றப்பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் எம்.எல்.சியுமான கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டது.
அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 23ம் தேதி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கின் விசாரணைக்காக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இன்று காலை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் சிசோடியா.
அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, “நான் ஏழெட்டு மாதங்கள் சிறையில் இருந்தால் கூட, என்னை நினைத்து வருத்தப்படாதீர்கள். பெருமை கொள்ளுங்கள். பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பயப்படுகிறார். எனவே, என்னை ஒரு போலி வழக்கில் சிக்க வைக்க விரும்புகிறார்” எனக் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கைது செய்துள்ளது சிபிஐ. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இதுகுறித்துபதிவிட்டுள்ள பாஜக நிர்வாகி கபில் மிஸ்ரா, “கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்று ஆரம்பம் முதலே நான் கூறிவந்தேன். இப்போது சத்யேந்தர் ஜெயினும், மணீஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டுவிட்டனர். அடுத்தது கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.