மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் ட்விட்டர் பதிவை வெளியிட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், ஒரு மதத்திற்கு ஆதரவாகவும், ஒரு மதத்திற்கு எதிராகவும் கருத்தகளைப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோவை தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தைரியமா? விடியலுக்கா? என்று கருத்து பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, மதக்கலவரத்தை தூண்டும் வீடியோவை பகிர்ந்த சவுதாமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு கடந்த 9.2.2022 அன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், சவுதாமணி மீதான புகார் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சவுதாமணி பதிவிட்ட வீடியோவால் மதக்கலவரம் தூண்டப்படும் எனபதை உறுதி செய்த காவல்துறையினர், சவுதாமணி மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி , காவல்துறை சவுதாமணி மீது வழக்குப் பதிவு செய்துள்ளதால் அந்த வழக்கை எதிர்த்து வேண்டுமென்றால் புதிய மனு தாக்கல் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்து, தற்போது புகாரின் அடிப்படையில் சவுதாமணியின் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில. தனக்கு முன் ஜாமீன் கோரி சவுதாமணி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு இன்று (25.2.2022) விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன் ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் மனுவை விசாரித்த நீதிபதி, சமுதாயத்தில் உயர் இடத்தில் இருக்கும் படித்தவரே இதுபோன்ற தவறை செய்யலாமா? என்று கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.