போலிஸ் வாகனம் எரித்தும், போலீசாரை கல், கம்பு, இரும்பு கம்பிகளால் தாக்கியும் , பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை விதித்ததால் இழந்தார்
 
சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதா போலவே  இவரும்  தனது எம்எல்.ஏ பதவியை தீர்ப்பு வந்ததும்  இழந்தது குறிப்பிடதக்கது 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர், ஜி.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இரு பிரிவினருக்கு இடையே கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக 1998-ம் ஆண்டு ஜி.மங்கலம் சர்ஜாபுரம் சந்திப்பில் கோவிந்தரெட்டி என்பவர் தலைமையில் சிறு குழு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அப்போது பாஜக நிர்வாகியாக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி   அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசாரை கல், கம்பு, இரும்பு கம்பிகளால் போராட்டக்காரர்கள் தாக்கினார்.
 
இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் பலர் காயம் அடைந்தனர். போராட்டத்தின் போது போலீஸ் ஜீப் ஒன்றும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
 
அரசு பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
 
இந்த கலவரம் தொடர்பாக பாகலூர் போலீசார் கோவிந்தரெட்டஉள்பட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த போராட்டத்தில் தற்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வரும் பாலகிருஷ்ணரெட்டியும் கலந்து கொண்டதால் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
அவர், 72-வது குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 341(சட்டவிரோதமாக தடுத்தல்), தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கு விசாரணை ஓசூர் கோர்ட்டில் நடந்தது. பின்னர், கிருஷ்ணகிரி மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
 
விசாரணையின் போது 27 பேர் இறந்து போனதால் மற்ற 81 பேர் மீதான வழக்கு நடந்து வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணரெட்டி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருந்து வருவதால் இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட்டுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கை நீதிபதி சாந்தி விசாரித்தார். அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் காயத்ரி ஆஜராகி வாதாடினார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளதாக நீதிபதி அறிவித்தார்.
 
இதற்காக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி உள்பட 81 பேரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். மதியம் 3 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.
 
அந்த தீர்ப்பில் ” இந்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்படுகிறது.
 
அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 341(சட்டவிரோதமாக தடுத்தல்), தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் அவருக்கு, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147-ன் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 341-ன் கீழ் ஒரு மாதம் சிறை தண்டனையும், தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை பாலகிருஷ்ணரெட்டி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.
 
போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கோவிந்த ரெட்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.37 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
 
குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்படுகிறது. மீதமுள்ள 4 பேருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. மீதமுள்ள 65 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக் கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 
அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்ததும், அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் டி.செல்வம் இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.
 
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.முன்னதாக பாலகிருஷ்ண ரெட்டி சிரித்தபடி கோர்ட்டுக்குள் வந்தார். தண்டனை விவரத்தை அறிவித்ததும் அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணரெட்டி சோகமானார்.
 
தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்ததும் சோகத்தில் இருந்து மீண்டு வந்தார்.மதியம் 2.30 மணிக்கு தனக்கு சொந்தமான காரில் பாலகிருஷ்ணரெட்டி கோர்ட்டுக்கு வந்தார். மீண்டும் மாலை 4.30 மணிக்கு கோர்ட்டில் இருந்து அவர் புறப்பட்டு சென்றார்.
 
கோவிந்தரெட்டியை தவிர்த்து மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள், இருநபர் ஜாமீன் அளித்து கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
 
கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பாலகிருஷ்ணரெட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார்.
 
அப்போது அவர், 1998-ம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்தும் விளக்கி கூறினார்.
 
இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் உடன் இருந்தார். அவரிடம் முதல்- அமைச்சர் சட்ட ஆலோசனைகளை கேட்டறிந்தார்.
 
அப்போது, 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ஒன்று, முதல்-அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:மத்திய அரசு மற்றும் லில்லி தாமசுக்கு இடையிலான வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், குற்ற வழக்கில் விதிக்கப்படும் தண்டனையின் மூலம் தானாகவே தகுதி இழப்பு நேரிட்டு விடுகிறது.
 
அதோடு, எம்.எல்.ஏ.க்கான தகுதி இழப்பை, அவரது மேல்முறையீட்டுக்கு வாய்ப்பு அளித்து தள்ளி வைக்கத் தேவையில்லை.
 
அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள தண்டனை உத்தரவுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வைத்தும், அவரது தகுதி இழப்பை முன்தேதியிட்டு நிறுத்த முடியாது.
 
அதோடு, கோர்ட்டின் மூலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 103 மற்றும் 192-ம் பிரிவுகளின் கீழ், அவரது தகுதி இழப்புக்காக ஜனாதிபதி அல்லது கவர்னரின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை.
இந்தநிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேற்றிரவு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் சந்தித்து பேசினார். அப்போது கடிதம் ஒன்றை கவர்னரிடம் அவர் வழங்கியதாகக் கூறப்படுகிறது. 

 
இது அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் தகுதி இழப்பை முன்னிட்டு, அவர் வகித்து வந்த இலாகாக்களை வேறு அமைச்சருக்கு வழங்குவது குறித்த கடிதமாக இருக்கக்கூடும் என்றும்  பேசப்படுகிறது.
 
பாலகிருஷ்ணரெட்டியின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜீமங்கலம் ஆகும். ஆரம்பத்தில் பா.ஜனதா கட்சியில் இருந்த அவர் பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்தார்
.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஓசூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.
 
பிறகு அவர் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.
 
இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் பாலகிருஷ்ணரெட்டிக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. 2-ஆக பிரிக்கப்பட்டது.
 
அதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பாலகிருஷ்ணரெட்டிக்கு பதவி வழங்கப்பட்டது.