சொகுசு கப்பல் போதைப்பொருள் விருந்து விவகாரத்தில் சிக்கியுள்ள ஆர்யன் கானை வருகிற 7 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த என்சிபிக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மும்பையில் இருந்து கோவாவுக்கு அக்டோபர் 02 ஆம் தேதி சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் விருந்து நடக்க இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து 20-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றுலா பயணிகள் போல அந்த கப்பலில் சென்றனர். நேற்று முன்தினம் (02-10-2021) இரவு நடுக்கடல் அருகே கப்பல் சென்று கொண்டிருந்தபோது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் வினியோகம் நடந்தது.
இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு 2 பெண்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர். அவர்கள் 8 பேரிடமிருந்தும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
பின்னர் மும்பை அழைத்து வரப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் சட்டப்பிரிவுகள் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று (04-10-2021) அவர்கள் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் ஆர்யன் கான் உள்ளிட்ட மூன்று பேரை காவலில் எடுத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
விசாரணையில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. அதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் காவலுக்கு ஆர்யன் கானை அனுப்ப வேண்டியதில்லை என அவரது வக்கீல் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ஆர்யன் கானை அக்டோபர் 7 ஆம் தேதி வரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன் கானை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்த உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.