பொள்ளாச்சி சம்பவம் போல் மீண்டும் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க வாட்ச்மேன் படக்குழு 50 சிசிடிவி கேமராக்களை போலீசாருக்கு வழங்கியுள்ளனர்.
டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள வாட்ச்மேன் படத்தில் ஜி.வி.பிரகாஷ், யோகிபாபு, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புரூனோ என்ற நாய் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளது.
நாய் என்றாலே பயம் கொண்ட கதாநாயகன் ஒரு வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து செல்லும்போது புரூனோவிடம் மாட்டிக் கொள்வதால் ஏற்படும் சுவாரஸ்யங்களையும், நாய் செய்யும் சுட்டித்தனத்தையும் அனைவரும் ரசிக்கும்படி படமாக்கியுள்ளார் ஏ.எல்.விஜய்.
“மைவாட்ச்மான்” என்ற ட்விட்டர் அக்கௌன்ட் தொடங்கபட்டு, அதில் செல்லப்பிராணி மேல் அன்பு கொண்ட 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நாயை போட்டோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் சமீபத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் 50 சிசிடிவி கேமராக்களை பொருத்தி, அதை கண்காணிக்கும் பொறுப்பை அப்பகுதியில் உள்ள காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதில் கலந்துகொண்ட ஜி.வி.பிரகாஷ் பேசும் போது பொள்ளாச்சி மட்டுமல்லாது மற்ற பகுதிகளிலும் இதே போல் குற்றங்கள் நடைபெறுகிறது . எனவே சமூக அக்கறை கொண்ட வசதி படைத்தவர்கள் அந்தந்த பகுதியில் இந்த மாதிரி சி சி டி வி கேமராக்களை நிறுவினால் குற்றம் புரிவோருக்கு ஒரு பயம் ஏற்பட்டு விடும். இதன் மூலம் 50 சதவீதம் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. எங்களால் முடிந்ததை நாங்கள் செய்துள்ளோம் . அதை போல் மற்றவர்களும் செய்து குற்றங்களை தடுக்க வேண்டும் என ஜி.வி.பிரகாஷ் பேசினார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் பேசும் போது வெறுமனே நல்ல சினிமா மட்டும் எடுக்காமல் அந்த சினிமா மூலம் சமூக அக்கறையுடன் இந்த சமூகத்திற்கு நல்லதை செய்வேன். இது முடிவல்ல ஆரம்பம். மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் த்ரில்லர் படமான ‘சைக்கோ’ மற்றும் சிபிராஜ் நடிப்பில் குழந்தைகளுக்கான ‘மாயோன்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறேன். எனது ஒவ்வொரு படத்திலும் இது தொடரும் என்றார்.